திருமணங்களில் சம்பரதாய திருமணம், சீர்திருத்த திருமணம், பதிவு அலுவலக திருமணம், கோயில் திருமணம் என பல வகை திருமணங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பெரும்பாலான திருமணங்கள் மணமக்களின் மத சம்பரதாய திருமணங்களாகவே நடைபெறும். ஆனால், மயிலாடுதுறையில் ஒரே ஜோடி இந்து, கிறித்துவ, இஸ்லாமிய என மும்மத முறைப்படி திருமணம் செய்துகொள்வது என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றாகும்.
இந்த அதிசய திருமணம் மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது. அதுவும் அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக, தனது நண்பர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த திருமணத்தை செய்துள்ளார். மயிலாடுதுறை சேர்ந்த பொறியியல் பட்டதாரி புருஷோத்தமன், இவர் போட்டி தேர்வு மூலம் தேர்வு பெற்று தபால்துறையில் பணியாற்றிவந்தார். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி கிராம நிர்வாக அலுவலர் வேலையில் தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூரில் கிராம நிர்வாக அலுவலகராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து, திருவையாற்றை சேர்ந்த புவனேஸ்வரி என்ற எம்.காம் பட்டதாரியை திருமணம் பேசி முடித்தார். அதனையடுத்து தனது நண்பர்களுடன் கலந்துபேசிய புருஷோத்தமன் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும், அனைத்து மதத்தினரும் உறவினர்களே, ஹிஜாப் என்ற பிரச்னையால் எந்த மதங்களுக்குள்ளும் பிரிவினை வரக்கூடாது என்றும், மதத்தால் பிரிந்திருந்தாலும் பழக்கத்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை புதிய முறையில் தமது திருமணம் மூலம் செய்துகாட்டுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி, மும்மத முறைப்படியும் தனது திருமணம் நடைபெறவேண்டும் என்று முடிவெடுத்து, அதனை பெண்வீட்டாருக்குத் தெரிவித்தனர், இதைக் கேள்விப்பட்ட பெண் வீட்டாரும் நல்ல முயற்சி என்று வரவேற்று இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் நண்பர்கள் உதவியுடன் மும்மத முறைப்படியான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மயிலாடுறையில் உள்ள திருமணமண்டபத்தில் 27 காலை இந்து முறைப்படி திருமணமும், 26 ஆம் தேதி இரவு இஸ்லாமிய முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது என்று பத்திரிகை அடித்து அழைப்பு விடுத்தார்.
அதனை தொடர்ந்து குறித்த தேதியில் 26 இரவு மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படியான ஆடைகளை அணிந்துவந்து மேடைடியல் அமர்ந்த இளஞ்ஜோடிகளான புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி திருமண நோக்கம் மற்றம் கணவன் மனைவி கடமைகள் பற்றியும் எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்திவைத்தார். அதன் பிறகு கிறித்தவ முறைப்படி ஆடை அலங்காரங்களை செய்துகொண்டு மணமேடையில் அமர்ந்த புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதியினருக்கு மங்கைநல்லூர் கிறித்துவ போதகர் தலைமையில் கிறித்துவ முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு இளஞ்ஜோடிகள் தங்களது கைகளில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று காலை இந்து முறைப்படியான திருணம் நடைபெற்றது. இந்த மும்மத திருமணங்களைக் கண்டுகளித்த உறவினர்களும் நண்பர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தமிழகத்தில் எந்த காலத்திலும் மத மோதல் வராமலிருக்க இது போன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்றும், கிராம நிர்வாக அலுவலரின் இந்த புதிய முயற்சியை உறவினர்கள் மட்டுமின்றி அனைவரும் வெகுவாக பாராட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.