கண்ணாடி விரியன் பாம்புடன் கடும் சண்டை வளர்த்த எஜமானை காப்பாற்ற வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்று உயிரைவிட்ட வளர்ப்பு நாய்க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. 


 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி கலைமணி. இவர்கள் தங்கள் வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘டைகர்’ என்ற நாயை வளர்த்து வந்தனர். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு காளிமுத்து வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் டைகர், பாம்பை பார்த்து குறைத்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் நாய் குறைத்த சத்தம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த காளிமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் கேட்கவில்லை.

 



 

கடித்து கொன்ற நாயும் செத்தது

 

வீட்டுக்குள் செல்ல முயன்ற பாம்புடன் நாய் தொடர்ந்து போராடி உள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பாம்பை நாய் கடித்து குதறியது. இதில் பாம்பு செத்தது. இதேபோல பாம்பு கடித்ததில் விஷம் ஏறி நாயும் பரிதாபமாக உயிரிழந்தது.நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் நேற்று காலை வழக்கம்போல் காளிமுத்துவும், அவருடைய மனைவியும் எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.

 

அப்போது வீட்டு வாசலில் 6½ அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பும், அதன் அருகில் நாய் டைகரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது உயிரை கொடுத்து டைகர்(நாய்) எங்களது உயிரை காப்பாற்றி விட்டதாக கூறி காளிமுத்துவும், கலைமணியும் கதறி அழுதனர்.

 



 

இதுகுறித்து காளிமுத்து கூறியதாவது:-

 

பிள்ளையைப்போல் வளர்த்தேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாயை பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்து வந்தேன். இரவு நேரத்தில் எனது வீட்டு வாசலில் நாய் படுத்திருந்து காவல் காக்கும். இந்த பாம்பு வீட்டுக்குள் வந்திருந்தால் என்னையோ, அல்லது எனது மனைவியையோ கடித்து இருக்கும். பிள்ளையைபோல் வளர்ந்து வந்த டைகர் (நாய்) எங்களை பாம்பிடம் இருந்து காப்பாற்றி விட்டு, அது தனது உயிரை விட்டுள்ளது என கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த நாய்க்கு கிராமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர். வீட்டுக்குள் செல்ல முயன்ற கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து கொன்று தனது எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி விட்டு நாய் தனது உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.