மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையார் சுனாமி நகரை சேர்ந்தவர் பூவராகவன் என்பவரின் மகன் 35 வயதான ராகுல். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கிள்ளிவளவன் தனது நண்பரான பக்கிரிசாமி என்பவரின் மகன் 42 வயதான மணிவண்ணன் என்பவரை அழைத்துச் சென்று ராகுலிடம் பணம் கேட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த மணிவண்ணன் அருகில் இருந்தவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி ராகுலை குத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த 35 வயதான ஷாம்சுந்தர் என்பவரையும் மணிவண்ணன் தாக்கிவிட்டு அங்கிருந்து கிள்ளிவளவனுடன் தப்பி ஓடி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நல்லூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அப்போது ராகுல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த ஷாம்சுந்தர் சிகிச்சைக்காக கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சென்ற புதுப்பட்டிணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்தவரின் உடல் கூறு ஆய்வுக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து சீர்காழி காவல்துறையினர் தப்பிச்சென்ற மணிவண்ணன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியேடிய கிள்ளிவளவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் தகராறில் மீனவர் ஒருவர் கொலையான சம்பவம் பழையாறு மீனவ கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேங்கைவயல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் தலையாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேசினர்.
இதில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அளக்குடி ஊராட்சி வெள்ளைமணல் கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்களை நிலத்தை விட்டு வெளியேற்றும் சீர்காழி வனச்சரக அதிகாரிகளுக்கு கட்டணம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.