ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்பட்ட காரணத்தினால் குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தற்பொழுது சம்பா சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். திருவாரூர் அருகே கள்ளிக்குடி, அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், மாங்குடி, தப்பளாம்புலியூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது வயல்களை டிராக்டர் மூலம் உழவு அடித்து விதைகளை தெளித்து வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் நேரடி விதைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



 

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கடன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளுக்கு 2,900 கோடி ரூபாயும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 300 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வரும் விவசாயிகள், தற்போது சம்பா சாகுபடி பணிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பயிர் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பழைய கடனை கட்டினால்தான் புதிய கடன் வழங்கப்படும் என விவசாயிகளை நிர்பந்திப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.



 

கடந்த ஆட்சிக்காலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 12,000 கோடி பயிர் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் அந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட அனைத்து விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.

 

இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தற்போது கட்ட வேண்டாம் அந்த கடன் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  தற்பொழுது பயிர்க் கடன் வாங்குவதற்கு விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கும் பொழுது கஜாபுயல் காலத்தில் நீங்கள் வாங்கிய கடனை கட்டினால் மட்டுமே புதிய கடன் வழங்கப்படும் என விவசாயிகளிடம் வங்கி ஊழியர்கள் தெரிவிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வரும் நாங்கள் தற்பொழுது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும் எனவும், கஜா புயல் காலத்தில் வாங்கிய கடனை தமிழ்நாடு அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும், அப்படி செய்தால் தான் இந்த ஆண்டு சம்பா சாகுபடியை நாங்கள் முழுமையாக செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தட்டுப்பாடின்றி விதை உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.