கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் ஆற்றங்கரை தெருவில் கோவில் நிலத்தில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர் அண்ணாதுரை-கௌரி தம்பதியினர். கணவன் மனைவி இருவருக்கும் இரண்டு கால்களால் நடக்கமுடியாத நிலையில், கைகளை கொண்டு தவழ்ந்து செல்லும் வகையில் மிகவும் ஏழ்மையான மாற்றுத்திறனாளிகள் ஆவர். இருவரது வீட்டிலும் ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும்

  4 வயதில் குழுந்தை அனுஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.



மாற்றுத்திறனாளி தம்பதியினர், ஆற்றங்கரையோரம் கோவில் நிலத்தில் சிறிய குடிசை வீட்டில் தங்கி கீற்றுகளை முடைந்து தயாரித்து, விற்பனை அதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால் ஒவ்வொரு நாளையும் கடக்க  போராடி வருகின்றனர்.  தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், ஊர் பொது மக்கள், மொத்த  கீற்று விற்பனை செய்பவர்கள் மூலம் தென்னங்கீற்றுகளை வாங்கி அதனை தங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் ஊறவைத்து,  யாருடைய உதவியும் இன்றி குளத்தில் இறங்கி தண்ணீரில் ஊறிய கீற்றுகளை மாற்றுத்திறனாளி தம்பதியினர் இருவரும் யாருடைய உதவியின்றி வெளியே எடுத்து வந்து அதனை கீற்றுகளாக முடைந்து விற்பனை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் மகளான அனுஷ்கா குளத்திலிருந்து ஊறிய தென்னத்தோகைகளை இழுப்பதற்கு உதவி செய்வது, அவர்களது மூன்று சக்கர சைக்கிளை தள்ளி விடுவது, உணவு பரிமாறுவது, குடிநீர் கொடுப்பது உள்ளிட்ட தன்னால் செய்ய முடியும் உதவியை, பெற்றோர்களுக்கு  உறுதுணையாக  4 வயது குழுந்தை அனுஷ்கா இருந்து வருகிறார். 



மேலும், அவர்கள் வசிக்கும் வீட்டைச்சுற்றி போதுமான பாதுகாப்பு இல்லாததால், கருவேல காடுகள் மற்றும் செடிகொடிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வருவதால் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு அனுதினமும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கும், தன்னுடைய மகளின் படிப்பு செலவிற்கும் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவி செய்தால், புண்ணியமாக இருக்கும் என மாற்றுத்திறனாளி தம்பதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.


மாற்றுத்திறனாளி  கணவர் அண்ணாதுரை கூறும்போது,



நானும் எனது மனைவியும் மாற்றுத்திறனாளிகள். எந்த வருமானமும் இல்லாததால் கீற்று பின்னி பிழைப்பு நடத்தி வருகிறோம். மழை காலம் என்பதால் இந்த பிழைப்பும் இனி செய்ய முடியாது. இது கோவில் நிலம் இந்த இடத்தில்தான் கொட்டகை போட்டு வசித்து வருகிறோம்.  பக்கவாட்டு சுவர் கட்ட முடியாமல் கீற்றுவைத்து மறைத்து வசித்து வருகின்றோம். எங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது.  கொரோனா காலத்தில் வேலை இன்றி மிகவும் கஷ்டப்பட்டு கிடந்தோம். பக்கத்து வீடுகளில் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தோம். எனது குழந்தைக்கு பால் வாங்க கூட காசு கிடையாது. அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றோம்.


உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால்தான் எனது குழந்தையுடன் இந்த முள்ளுக்காட்டில் வேலை செய்து பிழைத்து வருகிறோம். சில நாட்கள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதால், நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளி என்பதால் எங்களால் உடனடியாக ஓடி வர முடியவில்லை. அருகில் வீடுகள் இல்லாததால்  உதவிக்கு கூட ஆட்கள் கிடையாது. பெண் குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அவைகளை விரட்டி உயிருக்கு பயந்து, தன் மகளுக்காக வாழ்ந்து வருகின்றோம். மாவட்ட நிர்வாகம், எங்களது வாழ்க்கையை ஒளியேற்ற, தயவுசெய்து யாரவது உதவி செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு கைகூப்பி வேண்டுகோள் விடுக்கின்றார்.


இது குறித்து மாற்றுத்திறனாளி  மனைவி கவரி கூறும்போது



நாங்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள், கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எங்களது கஷ்டத்தை பார்த்து ஒரு சில உதவி செய்தனர். எங்களுக்கு வீடு கிடையாது. எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால், ஆபத்தான நிலையில் தினந்தோறும் வாழ்ந்து வரும் எங்களுக்கு வாழ்வு கொடுத்ததாக இருக்கும் என கண்ணீருடன் தெரிவித்தார்.