மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்தவர் மீனவர் லெட்சுமணன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்க பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்நிலையில் லெட்சுமணன் குடும்பத்தினர் ஊர்கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்த காரணத்தால், ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும், ஊரில் இவர்கள் குடும்பத்துடன் மற்றவர்கள் பேசினால் ஒரு லட்சம் ரூபாய் அபரதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்திருந்தனர். இந்த சூழலில் இதனால் தாங்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பலமுறை லெட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து வந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளைக் கடந்தும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தால் பல ஆண்டுகளாக வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருவதாகவும், தெரிவித்த லட்சுமணன் குடும்பத்தினர், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் இரு மகன்கள், மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எட்டு பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரண்டு நாளில் பிரச்சனையை பேசி தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தனர்.
ஆனால் ஒரு வாரம் காலம் கடந்த நிலையில் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மீனவர் வினோத் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகிய இருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தேசிய கொடி கம்பத்தின் கீழே அடுப்பு வைத்து சமையல் செய்தனர். தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கே அவர்கள் உடன்படாத காரணத்தால் காவல்துறையினர் அவர்களது அடுப்பை அணைத்து வலுக்கட்டாயமாக கணவன் மனைவி இருவரையும் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.