மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய நேரத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் விவசாயிகள்  அவதியுற்று வந்தனர். 




மேலும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வலியுறுத்தி அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 


Union Budget 2022: ‛மாநிலங்களுக்கு உதவ ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு...’ -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!


இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் அங்கு செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடலங்குடி கிராமத்திற்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. 




இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பழைய இடத்திலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   




நெல்லினை சாலையில் கொட்டி   மறியல் செய்த விவசாயிகள் பழைய இடத்திலேயே கொள்முதல் நிலையத்தை அமைத்து தரக்கோரி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த குத்தாலம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய இடத்திலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை விவசாயிகள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Budget 2022 Public Reaction: ‛விலைவாசி ஏறுது... வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாம இருந்தா என்ன பண்ணுவோம்’ -இது தமிழ்நாட்டு மக்களின் குரல்!