தஞ்சை மாவட்டம், நகர் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாக்கு சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு கூறுகையில்,தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம்  தேதி முதல் நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும். தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தஞ்சை

  மாநகராட்சி பகுதியில் மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 1,98,597 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.




மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியில் வடக்குவாசல், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், வடக்குவாசல், ஜான் டி பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், வடக்குவீதி, செயிண்ட் பீட்டர;ஸ் மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், கரந்தை, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், தென்கீழ் அலங்கம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், மிஷன் ஆலமரத்தெரு, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், பூக்காரகோயில் தெரு, செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குசாவடிகளும், கணபதி நகர் செல்வராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குசாவடிகளும், கண்ணன் நகர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 4 வாக்குசாவடிகளும், வல்லம் ரோடு, மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியில் 5 வாக்குசாவடிகளும் என மொத்தம் 28 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகள் ஆகும்.




இதில் வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள 2 பதட்டமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்த வாக்கு சாவடிகளில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க  வசதியாக சாய்தளம் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு 1,2 மற்றும் 3 நிலை அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி வகுப்பினை ஆய்வுசெய்யப்பட்டுள்ளது என்றார். இந்தஆய்வின் போது, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், வட்டாட்சியர் சீமான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.