பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.




இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.




மார்ச் 2024 –க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு முழுமையாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024-க்குள் அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.




இரும்புச் சத்து மூலம் இரத்தச் சோகையைத் தடுக்கிறது,  ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது, வைட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் பேசுகையில், "செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விநியோகிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அரிசி கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் இந்த அரிசியை உண்பதால் நோய் இல்லாதவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குரங்குகளுக்கும், எலிகளுக்கும் கொடுத்து பரிசோதித்த இந்த அரிசியை தற்போது மக்களுக்கு விநியோகிக்க உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார். 


மேலும், இந்த கோரிக்கையை குடியரசுத் தலைவர், பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் மனுவாக வழங்கினார். அதேபோன்று செறிவூட்டப்பட்ட அரிசியை ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு தடை விதிக்க கோரி சிபிஐ மாவட்ட செயலாளர் சீனிவாசன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன், இயற்கை விவசாயி ராமலிங்கம் ஆகியோரும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி பேசி அவர்களும் தனி தனியை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.