சோழர் காலத்தில் தாய்மொழிக் கல்வி இருந்ததால், கடல் கடந்து பல்வேறு நாடுகளில் தமிழர்களின் பெருமை பறைசாற்றப்பட்டது. அத்தகைய தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர முடியுமா? என்ற நிலைமையில் நாம் இருக்கிறோம் என்று பேரூர் திருமடம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தஞ்சை மாவட்ட தமிழ்க் கல்வி இயக்கம் சார்பில் தமிழ்வழிக் கல்வி மூன்றாவது மாநாடு நடந்தது.


இதில் பங்கேற்று அவர் பேசியதாவது: சோழர் காலத்தில் தாய்மொழிக் கல்வி இருந்தததால், கடல் கடந்து பல்வேறு நாடுகளில் தமிழர்களின் பெருமை பறைசாற்றப்பட்டது. அத்தகைய தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர முடியுமா? என்ற நிலைமையில் நாம் இருக்கிறோம்.

நிறைய பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக ஆங்கில வழிக் கல்வியில் பெருகிவிட்டது. அக்காலத்தில் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயக் கல்வி இருந்தது. ஆங்கிலம் கூடுதலாக ஒரு மொழிப் பாடமாகத்தான் இருந்து வந்தது. இதில், கற்றுத் தேர்ந்தவர்கள்தான் அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள், சான்றோர்கள் உருவாகினர்.

1970 ஆம் ஆண்டுக்கு பின்பு ஆங்கிலக் கல்விக்கு அனுமதி கிடைக்கத் தொடங்கியது. தங்களது குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தால்தான் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்ற தவறான மயக்க நிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டது. இதன் விளைவாக படித்த கூலிகள், தொழில்நுட்பக் கூலிகள் என சொல்லக்கூடிய அளவுக்கு பெருகியுள்ளது.

எனவே, தமிழ் வழிக் கல்வியை மீண்டும் எப்படிக் கொண்டு வர வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக பொறியியல், மருத்துவக் கல்வியை அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் கொண்டு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் நிறைய நூல்களை மொழியாக்கம் செய்வது, புதிய நூல்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தொடங்குவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைய முயற்சி செய்தார். இப்போதைய அரசும் தொடர்ந்து செயல்படுகிறது.

அரசு தொடர்ந்து செய்தாலும், அந்த எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மாணவர்கள் முன்வராததே இதற்குக் காரணம். அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல் போன்றவற்றை ஆங்கில வழியைத் தவிர தாய்மொழியில் படிக்க முடியாது என்ற தவறான எண்ணம் பரவி வருகிறது.

ஜெர்மனி, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பொறியியல், மருத்துவத்தைத் தங்களது தாய்மொழியில்தான் கற்கின்றனர். கர்நாடகம் போன்ற பக்கத்து மாநிலங்களில் தாய்மொழிக் கல்வியில் உறுதியாக இருப்பது போன்று நாமும் தமிழ்வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டிய கடமையைச் செய்வதில் நாம் உறுதியாக இருந்தால்தான் தமிழ்வழிக் கல்வி கனவு நனவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





முன்னதாக, மருத்துவர் சு. நரேந்திரன் எழுதிய தமிழ் வழிக் கல்வி கனவா? நனவா? என்ற நூலை அடிகளார் வெளியிட, அதை மருத்துவர் இரா. இளங்கோவன் பெற்றுக் கொண்டார். செம்மொழித் தமிழாய்வு நிறுவன சிறப்பு நிலைப் பேராசிரியர் மருதநாயகம், திருச்சி அமுதன் அடிகள், தமிழியக்கப் பொதுச் செயலர் திருமாறன், இணைச் செயலர் இளமுருகன், ஈரோடு புதுமலர் இதழாசிரியர் கண. குறிஞ்சி, தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் பதிப்பாசிரியர் காமராசன், திருவையாறு ஔவைக் கோட்டம் கலைவேந்தன், பேராசிரியர் பெரியசாமி, உலகத் திருக்குறள் பேரவை புலவர் கந்தசாமி மற்றும் பலர் பேசினர். தாமரை இதழாசிரியர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். முனைவர் வி. பாரி வரவேற்றார். பேராசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.