தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா? -எதிர்பார்ப்பில் விவசாயிகள்

மூடப்பட்ட தலைஞாயிறு கூட்டுறவுசர்க்கரை ஆலையை திறக்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் காரணமாக இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதுகளும் வழங்கப்பட்டது.

Continues below advertisement


இந்நிலையில் 1994ஆம் ஆண்டு  ரூபாய் 33  கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த  ஆலையை மறுசீரமைப்பு செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். 


ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து ஆலையை புனரமைக்ககோரியும், ஆலையை இயக்ககோரியும் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். மேலும் தற்போது ஆலையில் பணிபுரியும் 129 ஊழியர்களுக்கு கடந்த 2 வருடங்களாக ஊதியம் வழங்கவில்லை. பணிஓய்வு பெற்றவர்களுக்கு சேமநலநிதியும் வழங்கவில்லை. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் வருகின்ற 13ஆம் தேதி முதல்முறையாக வேளாண்துறை வளர்ச்சிக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இந்த பட்ஜெட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆலையை மறுசீரமைப்பு செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான்கு மாவட்ட கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் இந்த கரும்பு ஆலை இயக்கப்பட்டால் விவசாய பணிகளிலும், ஆலை வேலைகளிலும் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola