உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம். நன்னிலத்தில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  காமராஜ் பேச்சு.

 

நன்னிலத்தில் அதிமுகவின் நன்னிலம் பேரூராட்சிக் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ்  தலைமை வகித்தார். கூட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம் ஒன்றிய செயலாளர்  முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  காமராஜ் பேசியதாவது...

 

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் என்னை வெற்றிபெற செய்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்னிலம் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், எல்லா காலமும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்பதை நன்றியோடு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் மக்களின் நெடுநாளைய கோரிக்கையான அரசினர் கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 



மிக நவீன முறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ 3 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் பரந்து விரிந்த பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.  இதுபோன்ற பல்வேறு பணிகள் நன்னிலம் பேரூராட்சியில் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்து நன்னிலம் நகர மக்கள் தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 



நடைபெற உள்ள நன்னிலம் பேரூராட்சி தேர்தலிலும் அதிமுகவிற்கு 100 சதவீத வெற்றியை தருவார்கள். இந்த வெற்றியை ஒருங்கிணைக்கும் பணியில் நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்று பணியாற்ற வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திறந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையை கருத்தில் கொண்டு நெல் மூட்டைகள் தேங்காமல் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது குறுவை பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுவருகிறது. உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தண்ணீரைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் பேசியிருக்கும் நிலையில், திமுக தரப்பிலும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான தீவிர வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.