வங்க கடலில் மையம் கொண்ட மிக்ஜாம் புயல் கரையை நெருங்காத நிலையிலேயே தனது கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பெருவெள்ளத்தில் தத்தளித்து படிப்படியாக, மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது மிக்ஜாம் கொண்டு வந்த அதீதமழை. மிக்ஜாம் புயலானது சென்னையில் சராசரியாகவும் சரமாரியாகவும் 20 செ.மீ-க்கும் அதிமான மழையை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரின் அத்தனை புறநகர் பகுதிகளிலும் மிக குறைவான மணிநேரங்களில் மிக மிக அதீதமான மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழகு பருவமழையானது 6% பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் 29% கூடுதலாக பருவமழை பதிவாகி இருக்கிறது.
சென்னை புறநகர் பகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுவாகவே மழை காலங்களில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தரும். தற்போதைய பெருமழையில் பெரும்பாலான புறநகர்கள் வெள்ளத்தில் மிதந்தும் மூழ்கியும் கொண்டிருக்கின்றன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த அதீத கனமழையும் வெள்ளமும் எப்போதுதான் ஓயும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் 6 மணிநேரத்துக்கு மழை தொடரத்தான் செய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலைக்குப் பிறகு தான் மெல்ல மெல்ல மழையின் அளவுதான் குறையும் எனவும், ஆனாலும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னிரவில் இருந்துதான் மழை படிப்படியாக குறையும் என்றும், அதாவது சென்னையில் இன்று முழுவதும் மழை தொடரவே செய்யும் என எச்சரித்துள்ளது வானிலை மையம். அதாவது தற்போது சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் திடீரென 10, 11 கி.மீ வேகத்தில் நகருகிறது, சில நேரங்களில் மணிகு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க 6 மணிநேரம் அல்லது 7 மணிநேரம் ஆகும் என்பதால் இந்த கால கட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை அல்லது கனமழை நீடிக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். சென்னையில் இருந்து சுமார் 100 அல்லது 150 கிமீ தொலைவுக்கு அப்பால் புயல் நகர்ந்த பின்னர்தான் மழையானது நிற்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான ஜமீல்ராஜ் என்பவரது ஓட்டு வீடு மழையில் நனைந்து வீடு முழுவதும் மழை நீரில் ஊறி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வீட்டில் வழக்கம் போல ஜமீல்ராஜ் அவரது மனைவி கமலாதேவி மற்றும் மகள் சுபஸ்ரீ 20 ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென ஓட்டு வீடு இடிந்து உள்ளே விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் சேர்த்தனர். இதுகுறித்து திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழையால் வீடு இடித்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.