தஞ்சாவூர்: தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைப்பதை தடுக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


அந்த மனுவில் கிராம மக்கள் கூறியுள்ளதாவது: திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் திருப்பழனம் கிராம ஊராட்சி உள்ளது. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறாத நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறில் எங்கள் பாரம்பரிய திருப்பழனம் ஊராட்சியை சேர்ந்தால் முப்போகம் விளையும் நஞ்சை நிலம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. திருப்பழனம் கிராமத்தை திருவையாறுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் ஏற்கவில்லை.


மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும்.


தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.  எனவே திருப்பழனம் ஊராட்சியில் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சங்கரனார் குடிகாடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


சங்கரனார் குடிகாடு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பொது பாதையை சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த பொதுபாதையை சிமெண்ட் சாலையாக மாற்றவிடாமல் சில தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அரசு நிதியில் இந்த பாதையை அமைப்பதற்கு இடையூறாக இருந்து வருகின்றனர். இதனால் பொதுபாதை வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். மழைக்காலங்களில் மிகவும் சிரமமான நிலை உருவாகி விடுகிறது.


இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர். பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், சிமெண்ட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.