மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் முக்கிய கடமையாக உள்ளது. இவற்றில் மிக முக்கிய அடிப்படை தேவையாக இருப்பது குடிநீர். எனவே நீர் மேலாண்மைக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கிராமப்புறங்களை சேர்ந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜல்ஜீவன் மிஷன் (ஊரக குடிநீர் இயக்கம்) என்ற திட்டத்தை கடந்த 2019 -ம் ஆண்டு அறிவித்தார்.




இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து அதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய குடிநீர் திட்டங்களை தொடங்கி குழாய்கள் பதித்தல், குடிநீர் தொட்டிகள் கட்டுதல், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து ஊராட்சிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் 25 சதவீதத்தை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் கிராமங்களில் வசிக்கும் ஒருவருக்கு, தினசரி 55 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். இதன் மூலம் 2024 -ம் ஆண்டுக்குள், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாகும். 




தற்போது, கிராமங்களில் 10.41 கோடி அதாவது 54.36 சதவீதம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 19.15 கோடி வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 56.30 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், ஒரு கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 997 வீடுகளில், 70 லட்சத்து34 ஆயிரத்து 998 வீடுகளுக்கு இதுவரை குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் இந்திய அளவில் 3 -வது இடத்தையும், சாதனையாளர் விருதையும் மத்திய அரசிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.  ஜல் ஜீவன் திட்ட மிஷன் தலைமை அலுவலகத்திலிருந்து காணொளி  மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சரவையின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் நரேந்திர சிங்ஹா பாராட்டு தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 241 கிராம ஊராட்சிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 404 வீடுகளுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 55% குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் இந்திய அளவில் 3 -வது இடத்தையும், சாதனையாளர் விருதையும் மத்திய அரசிடம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.