திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை இருந்து உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால், மூன்று போக சாகுபடி என்பது ஒரு போக சாகுபடியாக குறைந்து, சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட தொடங்கினர்.

 

குறிப்பாக குறைந்த அளவு தண்ணீரில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியும் எனவும், திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வறட்சியை தாங்கி வளரும் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த செலவு செய்து அதிக லாபம் விவசாயிகள் பெறலாம் என வேளாண்துறை விவசாயிகளிடம் அறிவுறுத்தி வந்தது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் மட்டும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதனையடுத்து வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் பருத்தி சாகுபடியின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்த பருத்தியை விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த பருத்தியை வாங்குவதற்காக ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று உள்ளனர்.



 

திருவாரூரில் பருத்தி கொள்முதல் நிலையத்தில் குவின்டால் 8300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்ப்பட்ட கொரோனா தாக்கத்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் தொழில்களும் பாதிக்கப்பட்டது. இதனால் விளைந்த பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். தற்போது பருத்தி அறுவடை பணிகள்  நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூரில் உள்ள அரசு பருத்தி கொள்முதல் நிலையத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரத்து 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பருத்தி 75 முதல் 83 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.



 

இதனால் பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரத்திற்கு ஒரு நாள் விவசாயிகளின் பருத்தியை அரசு ஊழியர்கள் கொள்முதல் செய்துவரும் நிலையில், விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னரே பதிவு செய்துவிட்டு வாகனத்தின் மூலம் பருத்தியை கொண்டு வந்து வரிசையில் காத்திருந்து தங்களது பருத்தியை விற்பனை செய்து செல்கின்றனர். இன்று திருவாரூரில் உள்ள அரசு நேரடி பருத்தி விற்பனை நிலையத்தில் அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பருத்தி மூட்டைகளுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.