மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ராமதாஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற வானவெடி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இது கடந்த 2008 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டு வெடிகள், திருமணத்திற்கு தேவையான வாணவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது. மேலும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு வானவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இந்த தொழிற்சாலையில் மொத்தம்11 பேர் வேலை பார்த்து வந்த நிலையில் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் இடம், மருந்து கலக்கும் இடம் என தனித்தனியாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று வெடிகுடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டதுடன், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த விபத்தில் வெடி தயாரிப்பு பணியில் இருந்த தரங்கம்பாடி தாலுக்கா கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த மதன், கல்லூரி மாணவன் நிகேஸ், ராகவன் ஆகியோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் ஆகிய 3பேர் பேர் நாகை அரசு மருத்துவமனையிலும், மணிவண்ணன் என்பவர் மயிலாடுதுறை அரச மருத்துவமனை என 4 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் 286, 337, 304, 9(B) (1)(a) Indian explosive act இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வெடிக்கிடங்கு உரிமையாளர் மோகனை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2008 -ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை லைசென்ஸ்சோடு இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட வெடி மருந்து கிடங்கில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வினால் அசம்பாவிதம் நடைபெற்றதாக செவிவழி செய்தியாக கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். எப்படி வெடித்தது என்பதை கண்டறிவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. உரிமையாளர் மோகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிதொழில் தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறு ஆய்வு செய்யப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல் அடையாளம் கண்டறியப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.