தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தீவனப்புல் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கால்நடைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்களுடன் தீவனப்புல் பயன்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தாராசுரம் காய்கறி மார்க்கெட், கும்பகோணம் பெருமாண்டி கழிவு பொருட்கள் சேகரிக்கும் மையம், கும்பகோணம் அருகே கரிக்குலம் நகர்ப்புற குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கும் மையம் ஆகிய பல்வேறு இடங்களில் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த உரத்தை கும்பகோணத்தை சேர்ந்த 50-க்கும் அதிகமான விவசாயிகள் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பசு மாட்டிற்கு அளிக்கப்படும் தீவனப்புல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலர் இந்த இயற்கை உரங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். முழுவதும் இயற்கை முறையிலான உரம் என்பதால் இதை பயன்படுத்தி தீவனப்புல் உற்பத்திக்கு பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தீவனப்புல் அதிக அளவு சத்துக்களுடன் மிக வேகமாக வளர்கிறது. இதனால் மிகவும் சத்துள்ள தீவனப்புல் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தற்போது மாடுகளுக்கு புல் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. நெல் சாகுபடி மூலம் கிடைக்கின்ற வைக்கோல் மாட்டின் பசியை நிவர்த்தி செய்யுமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. ஆனால் கோ-4 கோ-5 போன்ற புல் வகைகளில் மாடுகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை சார்பில் எங்களுக்கு தீவனப்புல் விதைக்கரணைகள் அளிக்கப்பட்டன.
அந்த கரணைகள் மூலம் தீவனப்புல் உற்பத்தி செய்து மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். இதற்காக நாங்கள் யூரியா, பொட்டாஷ் போன்ற செயற்கை உரங்களை பயன்படுத்துவது கிடையாது. இதனால் மிகவும் ஆரோக்கியமான தீவனப்புல் உற்பத்தி செய்யப்படுகிறது.
கும்பகோணம் மாநகராட்சியின் சார்பில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் உரங்களைதான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் வரை இயற்கை உரம் பயன்படுத்துவதால் சுமார் 25 டன் தீவனப்புல் செழிப்பாக வளர்கிறது. இதனால் கால்நடைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தீவனப்புல் நன்கு லாபம் தரும் தொழிலாகவும் உள்ளது என்றார்.
இந்த இயற்கை உரத்தை கொண்டு நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகள் தீவனப்புல் போன்ற மாற்றுப்பயிர்களை பயிர் செய்தால் அவர்களது நிலம் மேலும் வளம் பெறம். குறிப்பாக கும்பகோணம் மாநகராட்சி உற்பத்தி செய்யும் இந்த இயற்கை உரங்களை இலவசமாக வாங்கி பயிருக்கு உரம் இட்டால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மாறி மிகவும் மோசமாக உள்ளது. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் இயற்கை முறையில் தயாரான உரங்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.