தமிழ்நாடின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா அவருக்கு பின்னர் சுகுணா சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகப்பட்டினம் மாவட்ட கட்டுப்பாட்டில்தான் இது நாள் வரை இயங்கி வருகிறது. 




இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியிலும் தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 




அதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் எல்லை வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுகிறது. இந்த சூழலில் இடம் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான என்றாலும், 200 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே ஆட்சியர் அலுவலகம் அமையும் இடத்தை பயன்படுத்திய தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கேட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் வட்டாட்சியர் ராவணன் மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினர் முன்னிலையில் தீவிரமாக பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்களை பால்பண்ணை பகுதிகளில் நேரில் சந்தித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், பூம்புகார் சட்டப்பேரவை நிவேதா எம்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணியால், அங்கு உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அளவீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே பணிகள் நடைபெறும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார். இழப்பீடு குறித்து முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.