மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற தளத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயிற்காக எமனை சம்காரம் செய்த தலம் என்பதால் அட்டவிரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமராத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூர்ணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யர் உயர்நிலைப்பள்ளியில் 1977-78 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு 2003 -ஆம் ஆண்டு மீண்டும் இணைத்து வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பு என்று அமைப்பை உருவாக்கினர்.இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரியாக உள்ளனர். இந்த அமைப்பினர் ஆண்டுக்கு ஒருமுறை கூடி தங்களது இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதுடன், தாங்கள் படித்த பள்ளிக்கும், அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பின் உள்ளவர்களுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததையடுத்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பு தலைவர் சண்முகானந்தன் தலைமையில் வந்தனர். தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து பின்னர் நூறுகால் மண்டபத்தில் 160 கலசங்கள் வைக்கப்பட்டு 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 30 பேர் சஷ்டியப்த பூர்த்தி என்று அழைக்கக்கூடிய அறுபதாம் திருமணம் செய்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தனர். அவர்களுக்கு கலசஅபிஷேகம் செய்யப்பட்டு மாங்கல்ய தானம், மாலை மாற்றுதல் மற்றும் ஆயுள் ஹோமம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சுவாமி அம்பாள் மற்றும் காலசம்கார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்