12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ( ஏப்ரல் 10) தொடங்கி உள்ளன. இந்தப் பணி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வை 4 லட்சத்து 03 ஆயிரத்து 156 மாணவர்களும், 4 லடசத்து 33 ஆயிரத்து 436 மாணவிகளும், 23 ஆயிரத்து 747 பேர் தனித்தேர்வர்களும், மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக் கைதிகள் 90 பேரும் தேர்வை எழுதினர். இதேபோல் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 982 மாணவர்களும், 7 ஆயிரத்து 728 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். 


 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்


பிளஸ் 2 தேர்வுகளுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டன. 13ஆம் தேதி மொழிப் பாடங்களுடன் தொடங்கிய தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. தொடர்ந்து இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களிலும் மாணவர்களின் ஆப்சென்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்தார்.


இன்று தொடங்கிய விடைத்தாள் திருத்தம் 


தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்ரல் 10) தொடங்கியுள்ளன. இதற்காக 50 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அனைத்தும், மண்டலத் தேர்வு மையங்களில் இருந்து திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டன.


மே 5ஆம் தேதி தேர்வு முடிவுகள்


10 ஆம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றப் பணிகள் முழுவீச்சில் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி, மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்புகான தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


என்னென்ன வழிகாட்டல்கள்?


* உதவித்‌ தேர்வாளரைக்‌ கொண்டு முழுமையாக விடைத் தாள்களை முதிப்பீடு செய்து தரும்‌ முழுப்பொறுப்பும்‌ முதன்மைத்‌ தேர்வாளருக்கே உரியதாகும்‌.


* தமக்கு ஒதுக்கீடு செய்யப்படாத உதவித்‌ தேர்வாளர்‌ தன்னிடமோ அல்லது தம்‌ குழுவிடமோ மதிப்பீட்டுப்‌ பணியின்‌ போது தேவையில்லாமல்‌ வந்து பேசுவது முற்றிலும்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌. இதனை முதன்மைக்‌ கண்காணிப்பானர்கள்‌ கண்காணிக்க வேண்டும்.


* விடைத்தாள் திருத்தும் அறையில்‌ எக்காரணத்தைக் கொண்டும்‌ செல்போனை பயன்‌படுத்தக் கூடாது. இது கண்டறியப்பட்டால்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌.


* குழுவில்‌ பேசிக்கொண்டோ, அலைப்பேசியில்‌ பேசிக்கொண்டோ விடைத்தாட்கள்‌ திருத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்‌.


* அடிக்கடி வெளியில்‌ சென்று வருவது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும்‌. 


* உணவு உண்பதற்காக முகாமை விட்டு வீட்டிற்கு சென்று அல்லது ஓட்டலுக்கு சென்று வருவது சிறந்த நடத்தையல்ல என்பதை தெரிவிக்க வேண்டும்‌. பணியின்‌போது முகாமை விட்டு வெளியில்‌ செல்லக்‌ கூடாது. இதனை முகாம்‌ அலுவலர் கண்காணிக்க வேண்டும்‌.


என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 


இதையும் வாசிக்கலாம்: 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.