மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மேலையூரை அடுத்த கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புத்திர பாக்கியம் வேண்டியும், நோய் தீர வேண்டியும், திருமண வரம் வேண்டியும் 50 ஆண்டுகளாக பக்தர்கள் பொங்கல் படையல் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையொட்டி அந்தோணியார் ஆலய வளாகத்தின் இரண்டு புறங்களிலும் பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்து அந்தோனியாருக்கு படையல் இட்டனர். 




இவ்வாறு படையலிடப்பட்ட பொங்கலை குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கும் தம்பதியினருக்கு ஒரே வாழை இலையில் பரிமாறப்பட்டது. இந்த பொங்கலை உண்ணுபவர்களுக்கு அடுத்த ஆண்டிற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடந்த ஆண்டு திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டி பிரார்த்தித்த பொதுமக்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதையடுத்து கோயிலின் முன்பு கும்மியடித்து, குலவையிட்டு அந்தோணியாருக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.




தொடர்ந்து பெண்கள் தாங்கள் படைத்த பொங்கல் பானையை அன்னக்கூடையில் வைத்து தங்கள் வீடுகளுக்கு வரிசையாக கொண்டு சென்றனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.




சீர்காழி அருகே இரண்டாவது முறையாக சாலை இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர்  கிராமத்திலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலையாக மேம்படுத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையின் வழியே சீர்காழியிலிருந்து பனங்காட்டங்குடி, வடரங்கம், பாலூரான்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியே  மாதிரவேளூருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக அரசு பஸ் இயக்கப்பட்டது. 




இந்த சாலை வழியே கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அப்பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள்  போன்ற வாகனங்கள் மூலமாக சென்று கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சாலையின் வழியே சென்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்து கொண்டிருக்கின்றன.  




இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சாலை இரண்டாக பிளந்தது, இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த சூழலில் தற்போது மீண்டும் அந்த   சாலையின் நடுவே மாதிரவேளூர் செல்லும் சாலையில் வாடி கிராமம் அருகில் சாலையின் நடுவில் இரண்டாகப் பிளந்தது ஒரு பகுதி சுமார் 100 மீட்டர் வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது. சாலையின் நடுவே  ஏற்பட்டுள்ள வெடிப்பால் இந்த சாலையின் வழியே செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எந்த நேரமும் இந்த சாலை உடைப்பு ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.  இதனை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து  உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்தியும், வலுப்படுத்தியும், மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் அரசுக் கோரிக்கை விடுக்கப்பட்டுத்துள்ளனர்.