தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு  மேலாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலைகளுமே உச்சம் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம்  முழுவதும் 300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தக்காளி, சின்ன வெங்காயம் மட்டுமல்லாது பச்சை, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையை தலை சுற்ற வைக்கும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.  சந்தையில் தக்காளி விலை கிலோ 110 ரூபாயாக ஆக உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது.




அந்த கூட்டத்தில், என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தக்காளி, சிறிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இப்போது தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பல்வேறு துறையை சார்ந்த நீங்கள் உங்கள் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும்.




தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திடவும் கேட்டுக் கொண்டார். 




தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். காய்கறி விலை உயர்ந்தாலும், அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை. இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவும். எனவே வேளாண் துறை இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.




இந்நிலையில் அரசு சார்பில் மயிலாடுதுறை நாராயண பிள்ளை சந்தில் அமைந்துள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் நேற்று முன்தினம் கூட்டுறவுத் துறையின் சார்பில் குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் வழங்கும் திட்டத்தை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கடையில், இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விற்பனையும் தொடங்கியது. இந்நிலையில், குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை நகரவாசிகள் மட்டும் இன்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் இன்று கூட்டுறவு பண்டக சாலையை அணுகினர். ஆனால் காலை முதலே தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியன இருப்பில் இல்லாததால், கடை ஊழியர்கள் பொது மக்களிடம் இருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்பினர்.




மேலும், இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் உள்ளிட்ட எந்த பொருளும் இருப்பில் இல்லை. ஒருகட்டத்தில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வெளியேறினர். திட்டம் தொடங்கிய மறுநாளே தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியன குறைந்த விலைக்கு கிடைக்காததாலும், கடை பூட்டி இருந்ததாலும் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து அத்துறையின் அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது காய்கனிகள் இருப்பில் இல்லாததால் கடை மூடப்பட்டுள்ளதாகவும், பொருள்கள் வந்தவுடன் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.