தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து வழக்கொழிந்த நெல் ரகங்களை மீட்கும் நோக்கில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் 15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழாவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, மாரிமுத்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநில வளர்ச்சி குழு தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், மூத்த வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் முயற்சியில் நெல் திருவிழா நடந்து வருகிறது.



 

தற்போது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகள் தங்களுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து வந்த நிலையில், வழக்கில் இருந்து மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் இந்த நெல் திருவிழா மூலம் பரவலாக்கப்பட்டுள்ளது.



 

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் ஆகியோரின் புகைப்படங்கள் மாட்டுவண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நெல் திருவிழா தொடங்கியது.

 

இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி இந்த விழாவில் ஏராமான விவசாயிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.



 

நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் அதனை பார்வையிட்டும் வாங்கி சென்றும் வருகின்றனர். 



 

நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்கள் பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.