கோரைப்புல் சாகுபடிக்காக விளைநிலத்தை வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள்
காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூரில் நெல் சாகுபடியே பிரதான விளைபொருளாக இருந்து வருகிறது. அம்மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடிகடந்த 2 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 70 சதவீகிதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும் 30 சதவீகிதம் ஆழ்துளை கிணறு மூலமாகவும் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் இல்லாத பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக கோரை சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்னிலம், கொத்தவாசல், ஸ்ரீவாஞ்சியம், தெக்கிராவெளி, அச்சுதமங்கலம் ஆகிய பகுதிகளில் கோரைப்புல் சாகுபடிக்காக தங்களது நிலங்களை கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளிடம் குத்தகைக்கு விடத்தொடங்கியுள்ள திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குத்தகை மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதாக கூறுகின்றனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கோரை புற்களை திருச்சி, முசிறி பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று பாய் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
தண்ணீர் பாய வழியில்லாத, வளமற்ற நிலப்பகுதிகளில் கோரை சாகுபடி ஆழ்த்துளை கிணற்றின் உதவியுடன் நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஏக்கருக்கு 4 மூட்டை யூரியா, 3 மூட்டை டிஏபி உரங்களை தவறாமல் இட்டுவரும் பட்சத்தில் சுமார் 40 வருடங்களுக்கு தொடர்ந்து கோரை புல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோரைப்புற்களை அறுவடை செய்து கட்டு போடும் நபர்களுக்கு கட்டுக்கூலியாக 18 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறுகையில்...
திருவாரூர் மாவட்டத்தில் மண்வளம் குன்றிய நிலங்களில் கோரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்பயிர் மற்றும் பணப்பயிர் சாகுபடிக்கு வழியில்லாத நிலங்களை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக வேளாண்துறையினர் விளை நிலமாக மாற்றிக்கொடுத்தால் உணவுபொருள் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இதற்காக அட்மா திட்டம் 2005-06ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டம் முடங்கியுள்ளது. வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே அட்மா திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் மாவட்ட அதிகாரிகளின் ஆர்வமின்மையால் விளைநிலங்கள் கோரை சாகுபடிக்கு இலக்காகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இதனால் நெல் பயிரிட வழியில்லாத நிலங்களை வருடத்திற்கு ரூ.10 ஆயிரத்திற்கு விவசாயிகள் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.