மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா முழுவதும் இன்று மின் பராமரிப்பு பணிக்காக மின்சார துறையினர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்த சீர்காழி உட்கோட்ட மின்சார வாரியம், அறிவிப்புக்கு முரணாக காலை 7 மணிக்கே மின்சாரம் நிறுத்தப்பட்டது.



இந்நிலையில் பொறையார், கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூர் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், ஆக்கூர் சுற்றுவட்டார பகுதிகள் இதுபோன்று வைத்தீஸ்வரன்கோயில் துணை மின் நிலையம், எடமணல் துணை மின் நிலையம், திருவெண்காடு துணை மின் நிலையம்  உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெரும் சுமார் 45 ஊர்களுக்கு மின் பராமரிப்பு பணியை காரணம் கூறி மின்வாரிய துறையினர் மின்சாரத்தை நிறுத்தினர்.




காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று சீர்காழி உட்கோட்டம் சார்பில் மின்சார வாரியம் அறிவித்திருந்த நிலையில்  காலை நிறுத்தப்பட்ட மின்சாரம் மாலை 5 மணிக்கு மீண்டும் மின் வினியோகம்  வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இரவு 8 மணி வரை காத்திருந்த வியாபாரிகள் மின்சாரம் இல்லாததால் தங்களது கடைகளை பூட்டி விட்டு சென்றனர். இதேபோல் பொதுமக்களும் மிக்சி கிரைண்டர் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். அதுமட்டுமின்றி பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வீட்டில் மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி படித்தனர். தொடர்ந்து பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் மின்சாரம் வழங்க வலியுறுத்தி மின்சார துறைக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு மின்வினியோகம் வழங்கப்படாததால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. 




இந்நிலையில் மின் நிறுத்த கால தாமதம் குறித்து மின்சார வாரியத்தை சேர்ந்த சிலர் கூறுகையில் அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக பணம் பெற்றுக்கொண்டு ரியல் எஸ்டேட் ஓனர்களுக்கு ஆதரவாக, பல இடங்களில் வீட்டு மனை அமைக்கும் இடங்களுக்கு மின்கம்பங்கள் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருவதாகவும், அந்த மின் கம்பம் அமைக்கும் பணியினை விரைவாக அமைத்துதருவதற்காக மக்களை இன்னலுக்கு ஆளாகி இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக மின் நிறுத்தம் செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்த உண்மை நிலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.