மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் இருந்து அசிக்காடு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சுமார் 2 அடி விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள 2 வது கண்மாய் அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளும் பணி நடைபெற்றது வருகிறது. அப்போது மண்ணில் கருங்கலால் ஆன கற்சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனையடுத்து பொக்லைன் ஓட்டுனர் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த அப்பகுதி கிராமமக்கள் அங்கு திரண்டு சிலையின் மீது படிந்து இருந்த மண்னை பத்திரமாக அப்புறப்படுத்தி அச்சிலையை எடுத்துச் சென்று மஞ்சளால் அபிஷேகம் செய்து, பூ, பழம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலையை மீட்டு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எப்படி இங்கு வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமான சிலை? யாரேனும் கடத்தி வந்து, இந்த பகுதியில் புதைத்து விட்டு சென்றனரா? அல்லது இயற்கை சீற்றத்தினால் இப்பகுதியில் புதையுண்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் அந்த சிலையை, அந்த கிராமத்திலேயே வைத்து வழிபாடு நடத்துவதற்காக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளத்தில், 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பய பக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 3 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள இச்சிலையில் வலது கை பக்கம் லேசாக உடைந்து காணப்படுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே இச்சிலை எந்த காலத்தையது என்பது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலை கண்டறியபட்டதை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரம் புகழ்பெற்ற பூம்புகார், வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகள் அமைந்திருப்பதால் இந்த சிலைக்கும் ஏதேனும் வரலாற்று பதிவு இருக்கும் என்றும், ஆகையால் கிராம மக்கள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தை மேலும் தோண்டி வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்றும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும்போது சிலைகள் கிடைப்பதும் அதனை எடுத்துச் செல்லும் வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு மேலும் சில தொடர்பான தகவலை சேகரிப்பது இல்லை என்றும், இதனால் பல்வேறு வரலாறுகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.