தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் தெரிவித்ததாவது,
"தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை வெற்றிகரமாக முடித்து அதனைத் தொடர்ந்து வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்திவரும் முதல்வர், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விரைவில் வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க உள்ளதாகவும், அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணப்பலன்களை பாண்டு பத்திரங்களாக வழங்கப்போவதாகவும் சில தினங்களாக செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் பொதுமக்களில் ஒருவராக பார்த்து உதவிகள் செய்துவரும் முதல்வர் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இதுபோல் திட்டங்கள் அதிகாரிகளால் முன்மொழியப்பட்டால் ஏற்க வேண்டாம் என முதல்வரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர ஏனைய மற்ற மாநிலங்களில் ஓய்வு வயது 60-க்கும் அதற்கு மேலும் என்றே உள்ளது. அதிக வயதில் வேலைக்கு வந்தவர்கள் இந்த திட்டத்தால் குறைந்த பணிக்காலத்திலேயே ஓய்வுபெற்று மிகவும் பாதிப்படைவார்கள். இதுவரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அவர்கள் வேலையிழந்த மறுநாளே அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.
அதே நேரத்தில் பொருளாதார நிலையினை கருத்தில்கொள்ள வேண்டுமென்றால் 60 வயது அல்லது 33 ஆண்டு பணி முடித்தல் இதில் எது முந்தி வருகிறதோ அவர்களுக்கு பணி ஓய்வு வழங்கலாம். அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கும் ஓய்வுகால பணப்பலன்களை ரொக்கமாக வழங்கிட வேண்டும். மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தங்களை சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே 82லட்சத்து 71ஆயிரத்து 661 ரூபாய்க்கான வரைவோலையினை வழங்கியபோது, ஜாக்டோஜியோ போராட்டத்தில் முன்வைக்கப்பட்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான முதல்வர் அவர்களால் ஆதரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நிர்வாகம் மீண்டும் தொடக்கக் கல்வித்துறை என்ற பெயரில் தனி இயக்குனரகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் எளிமையுடன் நடைபெறும் வகையில் ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து படிப்படியான பதவி உயர்வுகளின் மூலம் நிறைந்த அனுபவங்களைக் கொண்ட பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடமாக மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இவைகள் உள்ளிட்ட அந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் பரிசீலித்து தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று வளர்ச்சிப்பணிகளுக்கு உதவியாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தும். இவ்வாறு ரெங்கராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.