தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக இன்று தஞ்சாவூரில் பைப் கம்பெனி வாசலில் மது அருந்து இடம் தராத ஆத்திரத்தில் காவலாளியை அடித்து கொலை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 




தஞ்சாவூர் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால்(74). இவர் தலைவாபாளையம் அருகே தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி காலை பொதுமக்கள் சிலர் பார்த்த போது ஜெயபால் ரத்த வெள்ளத்தில் பைப் கம்பெனி வாசலில் இறந்து கிடந்துள்ளார்.  இது குறித்து அம்மாப்பேட்டை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபால் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயபால் கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய தொடங்கினர்.

 

இதற்கிடையில், குற்றப்பிரிவு  உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் ஜெயபாலை இரண்டு நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளான வாளமர்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (37),  தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்த குமார் (50), நர்த்தங்குடிகாட்டை சேர்ந்த விஜயகுமார்(39), கரைமீண்டார்கோட்டையை சேர்ந்த ஜெகதீசன்(34) ஆகிய 4 பேரையும், நேற்று இரவு மாரியம்மன்கோவில் பகுதியில் நின்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.




அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 18 -ம் தேதி இரவு, மது அருந்த அந்த பைப் கம்பெனி வாசலுக்கு சென்ற போது ஜெயபால் தடுத்து நிறுத்தினார், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லை துாக்கி தலையில் போட்டு கொலை செய்து விட்டு, திருட்டுக்காக கொலை  நடந்தது போல் அனைவரையும் நம்ப வைக்க, அவரது மொபைல் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்றதாக காவல்துறையினரிடம் கொலை செய்த நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை வழக்காக காவல்துறையினர் தற்பொழுது மாற்றியுள்ளனர் மேலும் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்களுக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.