தஞ்சாவூர்: தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் படிப்பதற்காக தாய்மை நூலகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே தத்துவம். முதல் மூன்று மாதங்களில் உடலையும், மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.
அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும். மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய கூடாது. இனிமையான இசை, புத்தகங்களை படித்தல் மிகவும் நல்லது. தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும். தாயின் மகிழ்ச்சி அப்படியே குழந்தைக்கும் ஏற்படும். வெளியில் தாய் உற்சாகமாக இருப்பதை கருவில் இருக்கும் குழந்தைகளும் உணரும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மகப்பேறு மருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார். நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் மனதை மகிழ்வாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் நல்ல புத்தகங்களை வாசித்தல் மிகவும் நல்லது.
அந்த வகையில் தஞ்சாவூர், கல்லுக்குளம் பகுதியில் மாநகராட்சியின் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகாக வரும் கர்ப்பிணியர் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் படிக்கும் வகையில், கதை, இலக்கியம், வரலாறு, சமூக சீர்திருத்தம், தன்னம்பிக்கை உள்ளிட்ட புத்தகங்கள் அடங்கிய தாய்மை நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய தஞ்சை மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, கர்ப்பிணியர் மருத்துவமனையில் உள்ள மன அழுத்தத்தை போக்குவதற்காக இந்த புத்தகங்கள் மிகப் பயனுள்ளதாக இருக்கும். 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதில் உள்ளது. மேலும் பலர் புத்தகங்களை நன்கொடையாகவும் வழங்கி வருகின்றனர்.
விருப்பம் உள்ளவர்கள் தாய்மை நூலகத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினால் தாராளமாக வழங்கலாம். தஞ்சையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த இது போன்ற தாய்மை உலகம் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து கர்ப்பிணி பெண்கள் தரப்பில் கூறுகையில், மிகவும் நல்ல விஷயம் இது. புத்தகம் வாசிப்பதால் மனம் நிறைவடைகிறது. பிரசவம் குறித்த அச்சம் இல்லாமல் இருக்கலாம். நல்ல, நல்ல புத்தகங்களை வாசிப்பதால் குழந்தைக்கும் அந்த கருத்துக்கள் தாயின் மனதில் இருந்து செல்லும் என்கிறார்கள். ஆகச் சிறந்த நல்ல செயல் இது என்றனர்.