ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் லட்ச கணக்கான நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நியாய விலை கடையிலும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நியாய விலை கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசுக்கு வைத்து வருகின்றனர். குறிப்பாக நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், குறிப்பாக மகளிர் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவது போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 365 நாட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து துறையில் பணியாற்றும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படுவது போல் நியாய விலை கடையில் பணியாற்றும் மகளிருக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அதனை தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றும் மகளிருக்கு சரியாக விடுமுறை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பாக 270 நாட்கள் அரசால் அறிவிக்கப்பட்ட  நிலையில் இந்த 270 நாட்கள் விடுமுறை என்பது நியாய விலை கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் இந்த விடுமுறையை அனுமதிக்க தேவையான சிறப்பு  துணை விதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது மற்றும்  மற்றும் அது தொடர்பான உரிய ஒழுங்குமுறை விதிகளை ஒவ்வொரு சங்கங்களில் ஏற்படுத்தும் குறித்து கடந்த 2020 ல் மண்டல இணைப்பதிவாளர்கள் தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 




மேலும், கடந்த 2021 இல் வெளியிடப்பட்ட அரசாணையில் அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக  உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்த ஆணை என்பது கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள நியாய விலை கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் இதற்கென அனைத்து சங்கங்களிலும் தேவையான சிறப்பு துணை விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தகுதி உள்ள பெண் பணியாளர்களுக்கு இவ்விடுப்பினை அனுமதிக்க தங்கள் அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் கீழ் பணிபுரியும் நியாயவிலைக் கடை பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு என்பது ஆறு மாதம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அடுத்து மீதமுள்ள ஆறு மாதத்திற்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது என்றும் புகார் வந்துள்ளது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தனது சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். 




எனவே தங்கள் மண்டலத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு பன்னிரண்டு மாதங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தகுதி உள்ள அனைத்து பெண் பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதை தங்கள் அளவில் உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்றும் மேலும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் சலுகைகள் நியாய விலை கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொருந்தும் என்று ஏற்கனவே பதிவாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அரசால் அரசு பணியாளர்களுக்கு அறிவிக்கப்படும்  சலுகைகள் தொடர்பாக உடனுக்குடன் சங்க துணை விதிகளில் திருத்த மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அந்த சலுகைகள் கிடைக்க  நடவடிக்கை எடுக்கவும் அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் இது போன்ற புகார்கள் பெறப்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த சுற்றறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.