ஏரிகள், குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

பூதலூர் வட்டாரத்தில் உள்ள 135 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வருமா வராதா என தெரியவில்லை - விவசாயிகள் வேதனை

Continues below advertisement

தஞ்சாவூர்: பூதலூர் வட்டாரத்தில் உள்ள 135 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வருமா வராதா என தெரியவில்லை. இந்த பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடிக்காவது உரிய உத்திரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Continues below advertisement

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பூதலூர் பாஸ்கர்: காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு முறையாக நீர் மேலாண்மையை கையாளப்படாததால் கடலில் சென்று வீணாகியது.  நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு பக்கம் உபரிநீர் கடலில் வீணாகியது, மற்றொருபக்கம் நீர்நிலைகள் வறண்டே காணப்படுகிறது. இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். பூதலூர் வட்டாரத்தில் உள்ள 135 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வருமா வராதா என தெரியவில்லை. இந்த பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடிக்காவது உரிய உத்திரவாதத்தை அரசு வழங்க வேண்டும். 

தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ரவிச்சந்திரன்: திருவையாறு அருகே விளாங்குடி அய்யனார்கோவில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் சாக்கு மூட்டையில் அள்ளிச்செல்கின்றனர். இதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. முப்போகம் விளைச்சல் நடந்த டெல்டாவில் ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை உள்ளது. அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சிவகங்கை பூங்காவை சுற்றி உள்ள குளங்கள், மேல அலங்கம், கீழ அலங்கம் பகுதியில் உள்ள அகழிகளை உடன் தூர்வார வேண்டும்.
 
வைத்திலிங்கம்: நாங்கள் வேங்கராயன் குடிகாடு பகுதியில் வசித்து வருகிறோம். எங்களது விவசாய நிலங்கள் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள். அனைத்தும் சுமார் 300 ஏக்கர் வல்லுண்டாம்பட்டு ஊராட்சிக்கும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கும் உட்பட்டதாக உள்ளது. மேலும் செங்குளம் குளக்கரை முத்தரையர் தெரு வழியாக விவசாய நிலங்களுக்கு சென்று வர கிராம மண் சாலை உள்ளது. அந்தத் தெருவில்  உள்ள 15 வீடுகளுக்கும் இந்த மண் சாலை தான் பிரதான சாலையாக பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த மண்சாலை சேறும், சகதியமாக இருப்பதால் வயல்களுக்கு சென்று வர பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதேபோல் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வயல்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலையை தரம்  உயர்த்துவதில் காலதாமதம் செய்கின்றனர். எனவே எங்களது சிரமத்தை உணர்ந்து மண்சாலையை தரம் உயர்த்தி தர வேண்டும்.

ஏ.கே.ஆர். சந்தர்: சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரொக்கமாக வழங்காமல், உரங்களை மானியத்தில் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதற்கான பட்டியலை வெளிப்படையாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.

தங்கவேலு: ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டில் உள்ள 230 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆண்டாள் ஏரிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை.  சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் போதிய அளவு விதை நெல் வேளாண்துறை மூலம் விநியோகம் செய்ய வேண்டும்.

கோட்டாட்சியர் இலக்கியா: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடன் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் 

Continues below advertisement