மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அதனை அடுத்து பாதுகாப்பு கருதி அவரது 27 வயதான மனைவி இலக்கியா தனது வீட்டை பூட்டி விட்டு இரண்டு குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவ்வப்போது இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வீட்டை பார்த்துவிட்டு பூட்டிவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி சென்று வந்தவர் மீண்டும் இன்று சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் உள்ளே இலக்கியா சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 சவரன் தங்க தாலி செயின் மற்றும் 800 கிராம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து கொள்ளை சம்பவம் தொடர்பாக இலக்கியா குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பாக பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதனை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விடுவதாகவும், பின்பு கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் காவல்நிலையத்தை அணுகி கிளம்புவதாகவும், இதனை தடுக்க வரும் காலங்களிலாவது வெளியூர் செல்ல நேரிடும் பொதுமக்கள் அதுகுறித்த தகவலை காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றனர். மேலும் முடிந்தவரை வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சிசிடிவி கேமரா பொருத்தும் பட்சத்தில் குற்றவாளிகளை எளிதில் விரைவாக பிடித்து கொள்ளை போன பொருட்களை மீட்டு விடலாம் என்றும் இதனை வருங்காலங்களில் அலட்சியம் செய்யாமல் காவல்துறையின் வழிகாட்டுதலை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.