Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும் திரைப்படம் “என்ன சொல்ல போகிறாய்”.  A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் பேசிய நடிகர் அஸ்வின் படத்தின் கதை பிடிக்காவிட்டால் , கதை பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது தூங்கிவிடுவேன். இதுவரையில் 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன் ஆனால் நான் கதை கேட்டு தூங்காத ஒரே இயக்குநர் ஹரிதான் என இயக்குநரை புகழ்ந்து கூறுவதாக நினைத்துக்கொண்டு தனக்கு தானே பள்ளம் பறித்துக்கொண்டார். 






அதன் பிறகு பேசிய இயக்குநரும் அஸ்வினை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்திருந்தார். அதன்பிறகு நெட்டிசன்களுக்கு சொல்லவா வேண்டும் , முதல் படத்தில் அறிமுக நடிகராக களமிறங்கிவிட்டு பல படங்களை செய்து சலித்துப்போன நடிகர் போல பேசுகிறாரே அஸ்வின் என கமெண்டுகளை தெறிக்கவிட்டனர். அதுமட்டுமல்லாமல் அஸ்வின் மீது அதுவரையில் இருந்த பார்வையும் மக்கள் மத்தியில் மாற தொடங்கியது. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அஸ்வினை வைத்து வழக்கம் போல தங்களது விளையாட்டை தொடங்கிவிட்டனர். இதனால் மிகுந்த வேதனக்குள்ளான அஸ்வின் , முதல் மேடை என்பதால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பதட்டத்தில் பேசிவிட்டதாக மன்னிப்பு தெரிவித்தார். ஆனால் கண்டெண்ட் கிடைத்த நமது நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா என்ன? இன்னும் அவரை சீண்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.






இந்த சர்ச்சையின் எதிரொலியாக படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு தள்ளி வைத்துள்ளார்களாம். முன்னதாக என்ன சொல்கிறாய் திரைப்படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அஸ்வின் பேசிய பேச்சுக்கு படம் இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் அடுத்த வருடம் பாத்துக்கலாம் என படக்குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் அஸ்வின். முன்னதாக பல ஷார்ட் ஃபிலிம் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின் , முதன் முதலாக நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்தான் என்ன சொல்ல போகிறாய். இது மட்டுமல்லாமல் Trident Arts தயாரிப்பில் இன்னும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளாராம் அஸ்வின். முதம் படத்தின் புரமோஷனே இப்படி ஆனதால் தயாரிப்பு தரப்பு தற்போது மன உளைச்சலில் உள்ளார்களாம். என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா என இரண்டு கதாநாயகிகள் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.