கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் கழுத்தில் கத்தி வைத்து, கை, கால்களை கட்டி, இலங்கை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி சித்திரவதை செய்து, மேலும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி செல்போன்கள், செயினை பறித்து சென்று அட்டூழியம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் இரண்டு பைபர் படகுகளில் நேற்றிரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேக படகுகளில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களின் கழுத்தில் கத்தி வைத்து கை கால்களை கட்டியுள்ளனர். இதனை தடுத்த முருகேசன் முருகானந்தம் சுப்பிரமணி உள்ளிட்ட 9 மீனவர்களையும் ரப்பர் தடியால் சாரமாரியாக தாக்கி, கடலில் தள்ளி சித்தரவதை செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மீனவர்கள் அச்சத்தில் உறைந்துபோய், உயிர் பிழைக்க பல மணி நேரம் கடலில் நீந்தியவாறு போராடி உள்ளனர். பின்னர் இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு கழுத்தில் போட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு காயம்பட்ட வானவன் மகாதேவி மீனவர்களுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆறுதல் கூறினர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி தளவாடப் பொருட்களை கொள்ளையடித்தும் கடலில் தள்ளி சித்திரவதை செய்யும், சம்பவத்தால் நாகை வேதாரண்யம் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.