தஞ்சாவூர்: இன்றைய காலக்கட்டத்தில் விரல் நுனியில் எது தேவையோ அதை கொண்டு வரும் நவீன காலமாக உள்ளது. ஆனால் அப்படியே ரிவர்ஸ் அடித்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு சென்றால்... நவீன கருவிகளோ, இயந்திரங்களோ என்று எதுவுமே இல்லாத காலக்கட்டம். அப்போதே தங்களின் துல்லியமான செயல்பாடுகளால் நம் முன்னோர்கள் பலவித சாதனைகளை செய்து காட்டியுள்ளனர்.
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன்
இதில் தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனின் சாதனைகள் பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். ராஜராஜ சோழனுக்கு உலகளந்தான் என்ற சிறப்புப் பட்டம் இருந்தது. இதற்கு காரணம் என்ன தெரியுங்களா. தெரிந்து கொள்வோம். தமிழக வரலாற்றிலேயே மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் முதல் முறையாக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன என்பது தெரியுங்களா. இதுதான் உண்மையும் கூட. நில வரி வருமானம்தான் நிலையான வருவாய் என்பதை உணர்ந்த ராஜராஜ சோழன் போட்ட உத்தரவுதான் தனது ஆட்சிக்கு உள்பட்ட பகுதியில் நில அளவை எடுக்க வேண்டும் என்பது. இப்போது ஏக்கர் என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் நில அளவுக்கு 'குழி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
நில அளவுக்கு குழி என்ற சொல்
அதாவது ஒரு குழி என்பது 256 சதுர அடி. நூறு குழி கொண்டது ஒரு மா. இருபது மா என்பது ஒரு வேலி எனக் கணக்கிடப்பட்டது. கி.பி.1001ம் ஆண்டில் ராஜராஜ சோழன் நிலங்களை அளந்து பட்டியலிடுவதற்கு குரவன் உலகளந்தான் ராஜராஜமாராயன் தலைமையில் குழு அமைத்தார். அவரது பெயரில் உள்ள உலகளந்தான் என்பதும், ராஜராஜமாராயன் என்பதும் நிலத்தை அளந்த அதிகாரிக்கு மன்னர் வழங்கிய பட்டங்கள் என்பதும் நினைவுக்கூற வேண்டிய விஷயங்கள்.
துல்லியமான நுண்ணிய அறிவு... உலகளந்த கோல்
இக்காலத்தில் நிலம் அளப்பது என்று மிகவும் எளிது. அப்போது... அங்குதான் உள்ளது துல்லியமான நுண்ணிய அறிவு. ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட குழு இரண்டே ஆண்டுகளில் அனைத்து நிலங்களையும் அளந்து பட்டியலிட்டது. அப்போது, நிலத்தை அளக்க உலகளந்த கோல் என்பது பயன்படுத்தப்பட்டது. அப்படின்னா... இதுதான் நில அளவைக்கு பயன்படுத்தப்பட்டது. இது 16 சாண் நீளமுடையது. ஒவ்வொரு ஊரின் நிலம், கோயிலுக்குத் தானமாக தரப்பட்ட நிலத்தின் அளவு, நிலத்துக்கான வரி, கோயிலுக்கு நெல் மற்றும் பொன்னாகக் கொடுக்கப்பட வேண்டிய வரி என அனைத்து விவரங்களும் பட்டியல் இடப்பட்டது.
ராஜராஜ சோழனுக்கு உலகளந்தான் சிறப்பு பட்டம்
நிலத்தின் அளவு மிக நுண்ணிய முறையில் கணக்கிடப்பட்டது. ஒரு வேலி என்பதில் 5,000 கோடியில் ஒரு பங்கு அளவு நிலம் கூட அளக்கப்பட்டு, நிலத்தின் சரியான அளவுக்கு ஏற்ப தீர்வை விதிக்கப்பட்டிருக்கிறது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணிதானே. இதனால்தான் ராஜராஜ சோழனுக்கு உலகளந்தான் என்ற சிறப்புப் பட்டம் வந்தது. திருவாலங்காட்டில் உள்ள கோவில் கோபுரத்தில் இக்கோல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தஞ்சை கோவிலில் காணப்படும் உலகளந்தான் கோலின் சம அளவுள்ள படி எனும் பொருள் தருகிறது இக்கல்வெட்டு.
நிர்வாகச் சீர்திருத்தத்தை கி.பி. 1009 ஆம் ஆண்டில் கொண்டு வந்தார் ராஜராஜசோழன். இதன்மூலம், நகரம், நாடு, வளநாடு, மண்டலம் என்ற வகையில் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை மாமன்னன் ராஜராஜன் பிரித்தார். ஒவ்வொரு பகுதி நிர்வாகத்தைக் கவனிக்கத் தகுதியான ஆள்களை நியமித்தார்.
நாடுகள் மண்டலங்களாக மாற்றப்பட்டன
ராஜராஜன் காலத்துக்கு முன்பு நாடுகள் என்பது மட்டுமே வழக்கில் இருந்தது. அவரது காலத்தில்தான் நாடுகள் மண்டலங்களாக மாற்றப்பட்டன. இதன் மூலம் சோழ நாடு என்பது சோழ மண்டலம், தொண்டை நாடு என்பது ஜெயங்கொண்ட மண்டலம், பாண்டிய நாடு என்பது பாண்டிய மண்டலம் என மாற்றப்பட்டன. இதேபோல, ஈழம் என்பது மும்முடிச்சோழ மண்டலம் என பெயர் பெற்றது.