அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பொறுப்பேற்ற ஆண்டை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் ஏரி ரூ. 1 கோடி மதிப்பில் தூர்வாரப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் 2017, 2018, 2019, 2020 ஆகிய நான்காண்டுகளில் 500 ஏக்கர் பரப்பளவில் 6 ஏரிகள், 3 குளங்கள், 42 கிலோமீட்டர் ஆறு மற்றும் பாசன வடிகால்கள் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தூர்வாரப்பட்டுள்ளது. 

 

பொதுப்பணித் துறையின் ரூ 14 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ 3.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணிகளை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 100% முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கரைகளில் லட்சக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு  சோலைவனமாக காட்சியளிக்கிறது.  இப்பணிகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏரிகள் மற்றும் ஆறுகளில் தள மட்டத்திற்கு கீழ் 50 அடி ஆழம் வரை தரமான மணல் இருந்தும் 1 வண்டி கூட வெளியில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை, வண்டல் மண் மட்டும் அகற்றப்பட்டு கரைகளை அகலப்படுத்தி உயரப்படுத்தி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் முன்னுதாரனமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சுமார் 200 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 



 

நடப்பாண்டு 2021-ஆம் ஆண்டில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டிலான துளசேந்திரபுரம் வடக்கு ஏரி 140 ஏக்கர் தூர்வாரும் பணிகள் கடந்த மே 5-ஆம் தேதி முதல் 1 மாத காலமாக நடைபெற்று வருகிறது. 4 மண் அள்ளும் இயந்திரங்கள் 25-க்கும் மேற்ப்பட்ட டிராக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு நான்கு புறமும் கரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்ற ஆண்டை பெருமைப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



 

ஜூன் மாதம் இறுதிக்குள் பணி முடிக்கப்பட்டு ஏரியை சுற்றி சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவில் கரைகளில் இருபுறமும் பனைமரம் உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் நடப்பட உள்ளன. இதன் மூலம் பைங்காநாடு, ராஜகோபாலபுரம், தலையாமங்கலம், சோழபாண்டி, தென்பாதி, மெய்ப்பழத்தோட்டம், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.