திருவாரூர் அடுத்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்று விட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது.


இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார். பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்து வைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாததால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் ஜெயபாரதி தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதற்கும் பலனில்லாததால் 50 நாட்களுக்கு முன் விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு ஜெயபாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.




இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஜெயபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும் போது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. 


உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வாகன  விபத்தில் ஜெயபாரதி இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ஜெயபாரதியின் விபத்து சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தவேண்டும் என பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.


வாகனம் திருவாரூர் அடுத்த பவித்திமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமானதாகவும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும் தெரிகிறது. 


மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை வைத்து திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளாக போலீசரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வாகனத்தை விற்பதற்கு உதவியாக இருந்த ஜெகனை பிடித்து விசாரித்ததில் ஜெயபாரதியை வாகனத்தை விட்டு மோத சொன்னதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். 


இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜெகன் அளித்த தகவலின் பேரில் நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளரான பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வாகனத்தை ஓட்டிவந்த கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த பிரசன்னா, உதவியாக இருந்த ராஜா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மேலும் ஜெயபாரதியின் கணவரின் உறவினர்கள் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து போல சித்தரித்து இளம்பெண்ணை திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம், திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.