மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பாள் யானையின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, வழிபாட்டு தல ஊழியர்களை கொண்டு அன்றாட நிகழ்வுகளை செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.



இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பாராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அபயாம்பாள் யானை, கோவிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும், சுவாமி வீதி உலாக்களிலும் கலந்து கொண்டால் தான் உற்சவமே களைகட்டும். மேலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அபயாம்பாள் ஓர் செல்லப் பிள்ளையும் கூட. பல்வேறு பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் கோவிலுக்கு பிராத்தனைக்கு வந்துவிட்டு இந்த அபயாம்பாள் யானையிடம் வாழைப்பழங்கள் வழங்கிய அதன் சேட்டைகளை கண்டு மன அழுத்தம் குறைவதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் யானை அபயாம்பாள் எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் கொட்டகையிலேயே இருந்து வருகிறது. 



இந்நிலையில் வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து இந்து சமய அறநிலைத்துறை மண்டல அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர்  மற்றும் கால்நடை பாராமரிப்புதுறை மருத்துவர் முத்துகுமாரசாமி ஆகியோர் கோயிலில் யானை அபயாம்பாள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா? யானையிடம் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகிறதா? மாதாந்திர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா, உரிய நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை  குறித்து ஆய்வு செய்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்து சென்று 45 நாட்கள் நடைபயிற்சி, குளியல் , சமச்சீர் உணவு, மருத்துவ பராமரிப்பு என அனைத்தும் இந்த புத்துணர்வு மையங்களில் யானைகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தாண்டு யானைகள் புத்துணர்வு முகாம் எவ்வாறு நடைபெறும் என்ற கேள்வி எழுத்துள்ள இந்த வேளையில்
யானையினை எவ்வாறு பராமரிக்க வேண்டும், இது கோடைகாலம் என்பதால் யானை குளிர்விக்க அவ்வப்போது குளிக்க வைத்தல், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை வழங்குதல் போன்றவற்றை யானைப்பாகன் செந்திலிடம் ஆலோசனை வழங்கினார்.  மேலும் அதிகாரிகள் யானை அபயாம்பாளுக்கு தர்பூசணி பழங்களை கொடுத்து மகிழ்ந்தனர். வழக்கம் போல பக்தர்களுடன் மகிழ்ந்திருக்கும் அந்த யானை, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியது.