திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதான சாகுபடியாக உள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சனை காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்பட்ட காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 90 ஆயிரம் ஏக்கர் ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 88 ஆயிரத்து 750 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய வேளாண் துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணை ஜீன் 12ஆம் தேதி திறந்ததாலும், தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்ததாலும், தூர்வாரும் பணிகள் மூலம் 173 வாய்கால்கள் 16 கோடியே 34 லட்சம் மதிப்பில் காலத்தே தூர் வாரப்பட்டதாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பளவைவிட 40 ஆயிரத்து 448 ஏக்கர் கூடுதலாகும். நேரடி நெல் விதைப்பு மூலம் 30 ஆயிரத்து 125 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 17 ஆயிரத்து 490 ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 89 ஆயிரத்து 745 ஏக்கரிலும், ஆக மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 720 மெட்ரிக் டன் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் குறுவை சாகுபடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 ஆயிரத்து 700 ஏக்கருக்கு இலக்கு பெறப்பட்டு இதில் 47 ஆயிரத்து 589 ஏக்கருக்கு 41 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு வேளாண் துறையினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2,672 மெட்ரிக் டன் யூரியா, 1,485 மெட்ரிக் டன் டி.ஏ.பி. மற்றும் 742 மெட்ரிக் டன் பொட்டாஷ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 26 ஆயிரத்து 205 விவசாயிகள் 29 ஆயிரத்து 745 ஏக்கருக்கு உரங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். குறுவை தொகுப்பு திட்டத்தினால் விவசாயிகள் கூடுதல் ஊக்கம் பெற்று, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எய்தப் பெறாத மிகப்பெரிய வரலாற்று சாதனை ஆகும் என கூறப்பட்டுள்ளது.