திருவாரூர் மாவட்டத்தில் 938 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினாலும், போதிய பருவ மழை பெய்யாத காரணத்தினால் குறுவை மற்றும் தாளடி ஆகிய சாகுபடி பணிகளை செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடி பணியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட காரணத்தினால், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 70 சதவிகிதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும், 30 சதவிகிதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்டத்திற்கு 3252 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயம் செய்தது. இதில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 302 கோடி ரூபாயும், வணிக வங்கிகள் மூலமாக 2950 கோடி ரூபாயும் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு வங்கிகள் மூலமாக விவசாயிகள் பயிர் கடன் நகைக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பழைய கடன்களை விவசாயிகள் கட்டினால் தான் புதிய கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் புதிய கடன் வாங்க முடியாமல் தவித்து வந்த நிலையில், விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 4270 விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 24.5115 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாய நகை கடன் 9.87 கோடி ரூபாயும், பயிர்க்கடன் 14.6415 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வணிக வங்கிகள் மூலமாக 55 ஆயிரத்து 938 விவசாயிகளுக்கு, விவசாய நகை கடன் 898 கோடி ரூபாயும், பயிர்க்கடன் 15.89 கோடி ரூபாய் என 913.89 கோடி ரூபாய் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 60 ஆயிரத்து 208 விவசாயிகளுக்கு 938.4015 கோடி ரூபாய் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.