"ஆயிரம் வாள் முனைகளுக்கு அஞ்சமாட்டேன்; ஆனால், ஒரு பேனா முனைக்கு அஞ்சுவேன் எனக் கூறியவன் நெப்போலியன். எழுத்தும், பேச்சும் தவமாய் இருக்க வேண்டும். அதுதான் இன்றைக்குத் தேவை" என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை மையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பேசும் கலை, எழுதும் கலை பட்டயப் படிப்பு அறிமுக விழாவில் அவர் மேலும் பேசியது:


தமிழர்களுக்கு பேசுவது கலை மட்டுமல்ல; அது வாழ்க்கையின் உயிர்த் துடிப்பு. உறவுகளை, உணர்வுகளை வார்த்தைகளால், மொழியால், உடல் அசைவால் வெளிப்படுத்துகிற தனித் திறமை தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது. ஒரு அவையில் இடத்துக்கும், வந்திருப்போருக்கும் ஏற்ப என்ன சொல்ல வேண்டுமோ, அச்செய்தியைச் சுருக்கமாகவும், நிறைவாகவும் சொல்ல வேண்டும். நீண்ட நேரம் பேசிய பிறகு அவர் என்ன சொன்னார் எனக்கூறுவது பேச்சல்ல.


சுருக்குமாகப் பேசினாலும், இதயத்தின் ஆழத்தில் அச்சொற்கள் ஊடுருவ வேண்டும். அதுதான் தமிழ் மொழிக்கு இருக்கக்கூடிய தனிச்சிறப்பு. நம் அருமைத் தமிழ் மொழி அரண்மனை, ஆலய வாசம் செய்தது. நாட்டு விடுதலைக்கு தன்னைத் தாரை வார்த்தது. கடைக்கோடி மனிதனை நோக்கிப் பயணிக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் கடந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்தத் தனி மனிதனுக்கும் துதி பாடாமல், எந்தச் சமயத்தின் அடையாளத்தைப் பூசிக் கொள்ளாமல், உலக மானுடத்துக்காகவே பேசப்பட்ட, பாடப்பட்ட ஒரு அற இலக்கியம் திருக்குறள் மட்டுமே. அனைத்து பெருமைகளையும் தமிழ்க் கொண்டிருந்தாலும், அது ஏற வேண்டிய உயரத்துக்கு இன்னும் ஏற முடியாமல் நிலையில் இருக்கிறது.


இந்த நிலையில் நம்முடைய தமிழுக்கு இயல்பாகவே தொடர்புக்கு, பேச்சுக்கு, எழுத்துக்கு என தானாகவே வருவதற்கு சொற்குவியல்கள் ஏராளம். மற்றவற்றில் மரபுத்தன்மை இல்லாமல், செயற்கைத்தன்மை இருக்கும். தகவல் தொடர்பில் தமிழுக்கு மட்டும்தான் தனித்தன்மை இருக்கிறது.


பேச்சில் உண்மையும், நேர்மையும், சத்தியமும் இருக்க வேண்டும். பேச்சைப் போல எழுத்தும் அப்படித்தான். ஆயிரம் வாள் முனைகளுக்கு அஞ்சமாட்டேன்; ஆனால், ஒரு பேனா முனைக்கு அஞ்சுவேன் எனக் கூறியவன் நெப்போலியன். எழுத்தும், பேச்சும் தவமாய் இருக்க வேண்டும். அதுதான் இன்றைக்குத் தேவை.


நாம் பேச்சாளராவதோ, எழுத்தாளராவதோ பெருமை அல்ல. பேச்சும், எழுத்தும் ஒரு சிறு துளியாவது சமூகத்தின் மேன்மைக்குப் பயன்பட வேண்டும். அந்த நிலை நோக்கிச் சிந்தித்து செயல்படுவதுதான் இளையதலைமுறைக்கு இன்றைய தேவை. பேசும் கலையையும், எழுதும் கலையையும் இளையதலைமுறைக் கற்று, நாளும் வளர வேண்டும் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.


விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழாய்வு இருக்கை தலைவர் சாமி. கண்ணப்பன், தமிழ் வளர் மைய இயக்குநர் (பொ) குறிஞ்சிவேந்தன், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம், துணைச் செயலர் அ. பிரேம்குமார், பொருளாளர் தாழை ந. இளவழகன், மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் அரசப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.