தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். 


தமிழர்களின் மிக முக்கியமான திருநாள் பொங்கல் பண்டிகையாகும். வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.




கல்லூரி மாணவிகள் நம் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்தனர். வானவில்லுக்கே சவால் விடும் வகையில் வண்ணமயமாக கல்லூரி முழுவதும் பூஞ்சோலையில் வண்ணத்துப்பூச்சிகள் போல் உற்சாகமாக மாணவிகள் உலா வந்தனர்.
 
முன்னாள் மாணவிகள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவை ஒட்டி கல்லூரி வளாகம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் மாணவிகள் சங்க தலைவர் முனைவர் மலர்விழி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தொடர்ந்து சமத்துவ பொங்கல் சீரை எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதீன், டாக்டர் சூசைபால் ஆகியோர் வழங்கினர். இதை செந்தில்குமார், பூதலூர் லயன்ஸ் கிளப் திருமாறன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 




தொடர்ந்து மாணவிகள் வண்ண கோலமிட்டு, கரும்பால் தோரணம் கட்டி,சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து, மண் பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து, பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என உற்சாகமாக குரல் எழுப்பி பொங்கல் வைத்தனர். இதையடுத்து மாணவிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கிராமிய பாடலுக்கு கும்மியாட்டம் ஆடியும், திரைஇசை பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியும், சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் மாணவிகள் சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள், மேலும் ஜல்லிகட்டு காளை கொண்டு வரப்பட்டு மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நாட்டுப்புறப் பாடலாக இருந்தால் என்ன, திரைப்பட பாடலாக இருந்தால் என்ன என்று அனைத்துக்கும் செம வைபாக உற்சாக நடனம் ஆடி மகிழ்ச்சியில் மாணவிகள் திளைத்தனர்.




விழாவை ஒட்டி நெல் வகைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குபவர் தஞ்சை வசந்தம் லயன்ஸ் கிளப் சம்பத் வழங்கினார். நிகழ்ச்சிகளை முனைவர்கள் கரிகாலன், தமிழடியான், லயன்ஸ் ராஜாராமன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னாள் மாணவிகள் சங்க செயலர் முனைவர் தமிழ்செல்வி நன்றி கூறினார். மாட்டு வண்டி, ஜல்லிக்கட்டு காளை, டிராக்டர், டிப்பர் போன்றவற்றை பூதலூர் லயன்ஸ் கிளப் திருமாறன் கொண்டு வந்திருந்தார்.