தஞ்சாவூர்: வாலிபரை கடத்திய வழக்கில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. தலைமைக் கழக பெண் பேச்சாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா பாலக்கரை பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுபாஷ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சுபாஷ் வீட்டிற்கு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சுபாஷ் குறித்து கேட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சுபாஷின் சகோதரர் சுரேஷ்குமார் (31) எதற்காக விசாரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாத அந்த மர்ம கும்பர் சுரேஷ்குமாரை மிரட்டி கடத்தி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.




இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை தேடி வந்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் உத்தரவின் பெயரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. தொடர்ந்து சுரேஷ்குமாரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து தொழில்நுட்ப உதவியுடன் சுரேஷ்குமார் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர்.


அதில் கடந்த மாதம் பிப்ரவரி 21-ம் தேதி துபாய் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சுபாஷிடம் நாகை மாவட்டம் செம்பரை கடை தெருவை சேர்ந்த அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரான ரஹினா பேகம் என்பவருக்கு சொந்தமான 900 கிராம் தங்க நகையை கொடுத்து விட்டதாகவும், அதனை கொடுக்காமல் சுபாஷ் தலை மறைவானதாக கூறப்படுகிறது.


இந்த நகை குறித்து உரிய தகவல்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரஹீனா பேகம் தனது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் மேல விசரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் சல்மான் என்பவர் உதவியுடன் சுபாஷ் வீட்டிலிருந்து அவருடைய சகோதரர் சுரேஷ்குமாரை கடத்தி சென்றது தெரிய வந்தது. துபாயிலிருந்து அந்த நகையை யார் கொடுத்து அனுப்பினார்கள். சுபாஷிற்கும், ரஹினா பேகத்திற்கும் எப்படி பழக்கம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தொடர்ந்து சல்மான் மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய கும்பகோணத்தை சேர்ந்த முருகன் (51), சித்திரை வேல்(46), தினேஷ்(35), ராஜா(50), கும்பகோணம் மாத்தி பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் (33), நாகையை சேர்ந்த அபுல் ஹசன் (33), மன்சூர் அலி (32) ஆகிய 8 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரஹினா பேகத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடத்தல் வழக்கில் எட்டு பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கோர்ட்டு முன்பு சாலையில் குவிந்ததால் நேற்று நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.