தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 80 சதவீதம், தொழிலகப் பங்குதாரரிடமிருந்து 20 சதவீதம் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 40 கோடி மதிப்பில் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டு ஊக்கப்படுத்தும் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்தார்.


தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே கலந்து கொண்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
 
இந்திய மக்கள் தொகையான 140 கோடியில் இளைஞர்களின் எண்ணிக்கை 63 சதவீதமாக உள்ளது. இளைஞர்கள்தான் இந்த நாட்டில் நீண்ட நாள்களாக வாழக்கூடியவர்கள். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களை நம்பியே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மேலும், வளர்ந்த பாரதம் விரிவான திட்டம் 2047 இளைஞர்களை நம்பிதான் இருக்கிறது.


இந்தியாவின் உலகளாவிய உற்பத்தித் திறனுக்கு இந்திய மூலதன பொருள்கள் துறை முக்கியமானதாக உள்ளது. கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்படுவதற்காக மத்திய கனரக தொழில்கள் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், இறக்குமதியைக் குறைத்து மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுவதற்காக 10 - 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதிக்கு மாற்றாக மூலதன பொருள்கள் துறையில் ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.




சாஸ்த்ராவில் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 80 சதவீதம், தொழிலகப் பங்குதாரரிடமிருந்து 20 சதவீதம் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 40 கோடி மதிப்பில் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டு ஊக்கப்படுத்தும் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தொழிலக இணையம், ரோபோடிக்ஸ், 3டி, 4டி பிரிண்டிங்ஸ், ட்ரோன்ஸ், மின்னணு உற்பத்தி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மத்திய கனரக தொழில்கள் துறை இணைச் செயலர் விஜய் மிட்டல் சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம், திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையர் எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.