தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயிலில் இன்று மாலை முதல் நாளை காலை வரை தொடர்ந்து மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது. இதை ஒட்டி இன்று காலை முதல் பெரிய கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.


மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, ஒருநிலைப்படுத்தி சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும்.


அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி. இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுதத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே.


சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.




ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மஹா சிவராத்திரி விழா இன்று சிவன் கோயில்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது. அந்த வகையில் இந்தாண்டு ஆண்டு மகா சிவராத்திரி இன்று மார்ச் 8 ம் தேதி நடக்கிறது. இதைஒட்டி சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மகா சிவராத்திரி பெருவிழா நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இதேபோல் இன்று பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஒரே நாளில் வந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள், அரிசி மாவு, பொடி திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


இன்று மாலையில் நந்தி மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட பரதநாட்டியர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் மாலையில் நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஒருவழி பாதையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.