தஞ்சாவூர்: தஞ்சையை மட்டுமல்ல உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோரின் கண்ணீரும், அழுகுரலும் பார்ப்பவர்களை கலங்க செய்தது.
94 குழந்தைகளின் உயிரை பறித்த தீவிபத்து
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில், கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்று வரை மட்டுமல்ல என்றுமே அனைவர் மனதிலும் நீங்கா வடுவாக இருக்கும்.
20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இதன் 20-ம் ஆண்டு நினைவு தினமான இன்று தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்று தங்கள் வீடுகளில் தீ விபத்தில் இறந்த தங்கள் குழந்தைகளின் போட்டோக்களுக்கு மாலையிட்டதுடன், பிடித்தமான உணவு உள்ளிட்ட பொருள்களைப் படையலிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மலர் தூவி கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்
பின்னர் தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கு முன் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் மீது மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். பள்ளியின் முன் திரண்டு கதறியபடி குழந்தைகளின் போட்டோக்கள் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி
காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினர். தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 20ம் ஆண்டு நினைவு தினத்தை வெளிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை சம்பவம் நடந்த பள்ளி முன் வைக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர், மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
இன்றும் சோகத்திலிருந்து மீள முடியாத பெற்றோர்கள்
சம்பவம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்தும் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களின் முகத்தில் அந்தச் சோகம் கொஞ்சம்கூட அகலவில்லை. பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், காலையில் மொட்டுபோல பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியபோது அவர்கள் கருகி திரும்பி வருவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. 20 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அன்றைய வேதனையின் வடு உள்ளத்திலேயே உள்ளது. அன்றைய தினம் கும்பகோணம் முழுவதும் அழுகை சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இளம் பிஞ்சுகளை விழுங்க, அந்தத் தீக்கு எப்படித்தான் மனசு வந்தது என்று இன்று வரை நாங்கள் நினைத்து நினைத்து அழாத நாளே இல்லை. இன்றைக்கும் நாங்க நடைபிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.