தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி  கோயிலின் பிரசித்தி பெற்ற பொற்றாமரைக் குளத்து தண்ணீரில் படர்ந்துள்ள பாசியை அகற்றி விட்டு நீர் நிரப்ப வேண்டும். குளத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகரில் சிறப்பு மிக்க பல கோவில்கள் உள்ளன. இதன்காரணமாக கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.


108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த சிறப்பு வாய்ந்த வைணவ தலமாக இக்கோவில் விளங்குகிறது. பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார்.


மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார். திருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர்.


அதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.


இத்தகையை பெருமை வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. மகாமக குளத்தை அடுத்து பிரசித்தி பெற்ற குளமாக இது திகழ்கிறது. பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடமாக கும்பகோணம் மகாமக குளமும், பொற்றாமரை குளமும் திகழ்கின்றன. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சாரங்கபாணி கோவிலில் தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெறும்.


இதற்காக 30 அடி, நீள அகலத்தில் தெப்பம் செய்யப்பட்டு அதில் சாமியை வைத்து குளத்தை சுற்றி வருவார்கள். கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்பகோணம் பொற்றாமரை குளத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த பொற்றாமரை குளத்தின் தற்போதைய நிலையோ பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.


பொற்றாமரை குளத்தில் குறைந்த அளவு நீர் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நீர் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொற்றாமரை குளம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து பாசி படர்ந்து காணப்பட்டால் துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது.எனவே பிரசித்தி பெற்ற பொற்றாமரைக் குளத்து தண்ணீரில் படர்ந்துள்ள பாசியை அகற்றி விட்டு நீர் நிரப்ப வேண்டும் என்பதும், குளத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.