தஞ்சாவூர்: உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர். கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு தொடங்கப்படுகிறது.

விளக்கு என்றாலே நாச்சியார்கோவில் விளக்குகள்தான்

விளக்குகள் என்றாலே தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் விளக்குகள்தான் என்று சட்டென்று அனைவரும் கூறிவிடுவர். இங்கு பரம்பரை பரம்பரையாக குத்துவிளக்கு தயார் செய்து வருகின்றனர். தமிழக அளவில் ஐம்பொன் சிலைக்கு சுவாமிமலை, பாத்திரங்களுக்கு கும்பகோணம், வெற்றிலைக்கு ஆவூர் எப்படி சிறப்போ அதுபோல் நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு என்றால் தனி மவுசுதான்.





வெளிநாட்டுக்கும் பறக்கிறது

இங்கு தயார் செய்யப்படும் பித்தளை குத்து விளக்குகள் பாரினுக்கும் பறக்கிறது. முக்கியமாக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூருக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் வாங்குகின்றனர். கும்பகோணம் வரும் பக்தர்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி நாச்சியார்கோவிலுக்கு சென்று குத்துவிளக்கு வாங்காமல் செல்வதில்லை. காவிரி ஆற்றின் படுகை மண் ஐம்பொன் சிலை வார்ப்பு எடுக்க உகந்தது. இதனால்தான் சுவாமிமலையில் ஐம்பொன் சிலை செய்யும் ஸ்தபதிகளை மாமன்னன் ராஜராஜசோழன் குடியமர்த்தினார். அதேபோல் தான் பித்தளை குத்து விளக்கு தயார் செய்வதற்கு நாச்சியார்கோவில் சேப்பங்குளம் மற்றும் அரசலாற்றின் படுகை மண்தான் உகந்தது. 250 கிலோ பித்தளை, 50 கிலோ செம்பு காய்ச்சினால் ஒரு அடி குத்துவிளக்கு 90 எண்ணிக்கையில் தயாரிக்கலாம் என்கின்றனர். 6 அடி விளக்கு 6 எண்ணிக்கையில்தான் செய்ய முடியும். ஒரு குத்துவிளக்கு செய்ய குறைந்தது 6 நாட்களாகும்.  நிலையான விளக்கு என்பதுதான் காலப்போக்கில் மருவி குத்துவிளக்காகி விட்டது. குடும்பத்தில் உள்ளவர்கள் எக்காலத்திலும் நிலையாக இருக்க வேண்டும் என்பதால்தான் நிலை விளக்கு என்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.





15 வகைக்கும் அதிகமான விளக்குகள்

நாச்சியார்கோவிலில் காமாட்சி விளக்கு, அன்னபட்சி விளக்கு, தாமரை விளக்கு, பன்னீர் சொம்பு விளக்கு, கிளி விளக்கு, நவமுக  அலங்கார விளக்கு, ஏகதீப விளக்கு, பஞ்சமுக தீப விளக்கு, பட்டை விளக்கு, குபேர விளக்கு, சங்குசக்கர விளக்கு என 15க்கும் அதிகமான விளக்குகள் தயாரிக்கின்றனர்.
உலகத்தை காத்துவரும் பஞ்ச பூதங்கள் குத்து விளக்குகளில் இருக்கிறது. நீர் எண்ணெயாகவும், நிலம் மண்ணாகவும், நெருப்பு தீபமாகவும்,  காற்று புகையாகவும், ஆகாயம் ஒளியாகவும் இருக்கிறது. இதனால் பஞ்சமுக தீபத்தை வடிவமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குத்துவிளக்குக்கு  அன்னபட்சி, தகழி, கும்பாசம், மேத்துண்டு, வாழைப்பூ, காய், தட்டு ஆகிய ஏழு பாகங்கள் உண்டு.

இதில் மேத்துண்டு, வாழைப்பூ, காய் பகுதிகளுக்கு கரு வைக்காமல் வடிவமைத்தால் எடை அதிகமாகி தூக்குவதற்கு சிரமம் என்பதால் கரு  வைத்து வடிவமைப்பர். பிறை, தகழி, தட்டு, கும்பாசம் ஆகிய மூன்று பாகங்களுக்கு கரு வைக்காமல் நேரடியாக பித்தளை செம்பு ஊற்றி  வடிவமைப்பர்.

அரை அடி முதல் 7 அடி உயரம் வரை

நாச்சியார்கோவில் குத்துவிளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.