Just In





Kadappa Sambar: ஞாயிற்றுக்கிழமை ஆனால்போதும் தேடி வரும் மக்கள்: அப்படி என்னங்க இருக்கு அதுல?
Kumbakonam-Thanjavur Kadappa Sambar: சாம்பாரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தஞ்சாவூர், கும்பகோணத்தில் வித்தியாசமாக கடப்பா என்கிற சாம்பார் போன்ற தொட்டுக்கை மிகவும் பிரபலம். ருசியோ செம அலாதி.

தஞ்சாவூர்: அதான்டா இதான்டா கடப்பா சாம்பார் இருந்தா போதும்டா என்று ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும் இட்லி, தோசையோடு கடப்பா சாம்பாரை தொட்டு சாப்பிட்டு ருசியோ ருசி என்று பாராட்டுக்கின்றனர் தஞ்சாவூர் மக்கள்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு அடையாளங்களில் இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவை கருதப்படுகின்றன. இவற்றுக்கு, தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்குப் பெரும்பாலான ஊர்களில் சட்னி, சாம்பார் பயன்படுத்தப்படுகிறது. எத்தனை வகை சட்னி இருந்தாலும் சாம்பார் போல் தொட்டுக் கொள்ள ஒரு சைட்டிஷ் இருக்குமா. இருக்கே... சாம்பாரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தஞ்சாவூர், கும்பகோணத்தில் வித்தியாசமாக கடப்பா என்கிற சாம்பார் போன்ற தொட்டுக்கை மிகவும் பிரபலம். ருசியோ செம அலாதி.

தஞ்சாவூரில் காபி பேலஸ் உணவகத்தில் போடப்படும் இந்த கடப்பாவுக்கு என்று பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. இக்கடையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை சாம்பாருக்கு பதிலாக கடப்பா தொட்டுக்கையாக வைக்கப்படுவதே இதற்குக் காரணம். இதனால், இக்கடையில் மற்ற நாள்களை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் எப்போதும் அதிகம்தான் போங்க.
இக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 - 10.30 மணியளவில் வரை கடப்பா விநியோகம் இருக்கும். இதற்காக இக்கடையைத் தேடி வருபவர்கள் ஏராளம். வெளியூர்களிலிருந்து சுற்றுலாவாக வருபவர்கள் கூட இக்கடை கடப்பாவை ருசிப்பதற்காக ஆர்வத்துடன் வருவாங்கன்னா பார்த்துக்கோங்க. எனவே, ஞாயிற்றுக்கிழமை காலையில் இக்கடை திருவிழா போல ஜே...ஜே… வென்று காணப்படும். மிகுந்த ஆர்வத்துடன் வரும் ரசிகர்களிடம் கடப்பா தீர்ந்துவிட்டதாகக் கூறினால் மிகுந்த வருத்தத்துடன் செல்வர். அந்த அளவுக்கு இக்கடையின் கடப்பா மக்களைக் கட்டிப்போட்டுள்ளது.
இதுகுறித்து காபி பேலஸ் உணவக நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் காசுக் கடைத் தெருவில் கடந்த 1976 ஆம் ஆண்டில் முதல் முதலில் காபி பேலஸ் என்ற பெயரில் காபி கடை வைத்தோம். இதில், காபி வியாபாரம் செய்து வந்தோம். இதற்காக நாங்களே காப்பிக் கொட்டையை வாங்கி அரைத்து விடுவோம். இதனால், எங்களிடம் காபி வியாபாரம் வெற்றிகரமாக அமைந்தது. எட்டு மாதங்கள் கடந்தபோது பாலு மாமா என்கிற சமையல் மாஸ்டர் வந்தார். அதன் பிறகு உணவகத்தையும் தொடங்கினோம். பாலு மாமாதான் இந்த கடப்பாவை அறிமுகப்படுத்தினார். வாரத்தில் அனைத்து நாள்களும் இட்லி, தோசைக்கு சாம்பார் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வித்தியாசமாக கடப்பா கொடுக்கலாம் என்ற யோசனையைக் கூறினார்.
அதன் பிறகு இந்த கடப்பாவுக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இப்போது சிவகங்கை பூங்காவிற்கு அருகில் மேலவீதி சாலையில் மற்றொரு கிளையும் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் கடப்பா தீர்ந்து விட்டது என்று கூறினால் வருபவர்கள் முகம் வாடி விடுகிறது. அந்தளவிற்கு கடப்பா அவர்களை ஈர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், காபி பேலஸ் கடப்பான்னா ருசியிலும் சரி, தரத்திலும் சரி நம்பர் 1 தாங்க. இதுக்காகவே எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும்ன்னு காத்திருந்து வந்து சாப்பிடுவோம். பார்சல் வாங்கிக்கிட்டு போனா கம்மியாக இருக்கும். அதனால குடும்பத்தோட காலையில இங்க டிபன் சாப்பிட வந்து கடப்பா சாம்பாரை ஒரு பிடிபிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.